search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக இப்பகுதியில் இருந்து கொண்டு செல்லப்படும் உப்பு மற்றும் செங்கல், மணல் ஆகியவை பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. இதில் பெரும்பாலான லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 30-க்கும் அதிகமான உப்பளங்களில் விளைந்த உப்பு விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் உப்பளங்களில் உப்பு குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    20-க்கும் மேற்பட்ட செங்கல் சேம்பர்களில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் செங்கல் விற்பனை செய்யப்படும். வேலைநிறுத்த போராட்டத்தால் சேம்பர்களில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் தேக்க மடைந்துள்ளன.

    பல்வேறு கிராமங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கரி விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றனர்.

    சேம்பரில் இருந்தும் வீடு கட்டுமான பொருட்கள் லாரிகளில் கொண்டு வரமுடியாததால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

    இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மில்லர் கூறியதாவது:-

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ராமநாதபுரத்தில் கட்டுமான பொருட்கள் நகர்வு இல்லாததால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உப்பு, மீன், கருவாடு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    லாரி ஸ்டிரைக் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல கோடி மதிப்பிலான பட்டாசுகள் உரிய இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன.

    ராஜபாளையம், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நூற்பாலை, ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளும் தேக்கம் அடைந்துள்ளன. இன்றும் 50 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை.

    சிவகங்கை மாவட்டத்தில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் காய்கறி, பலசரக்கு பொருட்கள் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. #LorryStrike

    Next Story
    ×