search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களிடம் பதற்றம்-பயத்தை மத்திய அரசு உருவாக்குகிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
    X

    மக்களிடம் பதற்றம்-பயத்தை மத்திய அரசு உருவாக்குகிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

    தூத்துக்குடியில் அதிகாரத்தை பயன்படுத்தி அமைதியை ஏற்படுத்தி மக்களிடம் பதற்றம் மற்றும் பயத்தை மத்திய அரசு உருவாக்குகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். #kanimozhimp

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு சார்பில் விசாரணைக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை தூத்துக்குடியில் நடந்தது. ஒருங்கிணைப்புக்குழு வக்கீல் திலக் தலைமை தாங்கினார். செல்வராஜ், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் பாத்திமா பாபு, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி, தூத்துக்குடி மறைமாவட்ட பி‌ஷப் இவோன் அம்புரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபாலகவுடா, தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    ஒரு வெளியிடப்பட்ட அறிக்கையை பாதிக்கப்பட்ட மக்களிடம் சமர்ப்பிக்கும் இந்த நிகழ்ச்சி நடக்குமா, இல்லையா? என்ற பல கேள்விகளுக்கு பிறகு இங்கு நடந்துள்ளது. போலீசார் வழி நெடுக நின்று சோதனை செய்கிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி 5 முறை முதல்அமைச்சராக இருந்து உள்ளார். என் வாழ்நாளில் இவ்வளவு போலீசாரை தமிழ்நாட்டின் வீதிகளில் பார்த்தது கிடையாது. அந்த அளவுக்கு போலீஸ் கெடுபிடி தூத்துக்குடியில் உள்ளது. 10 அடிக்கு ஒருவர் கேமரா மூலம் பதிவு செய்து கொண்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் தான் தூத்துக்குடி உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உள்ளது என்று இப்பகுதி மக்கள் குரல் கொடுத்து உள்ளனர். ஆனால் அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. அதனை தீர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அந்த தொழிற்சாலை விதிகளை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

    மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடினார்கள். எந்தவித வன்முறையும் இல்லை. அந்த மக்களை அரசு சார்பில் யாரும் அழைத்து பேசக்கூட தயாராக இல்லை. ஸ்டெர்லைட் நிறுவனம் கோர்ட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதன் பின்னணியை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கான விதிமுறைகளை போலீசார் பின்பற்றவில்லை. அதிகாரிகள், போலீசாரை வைத்து மக்களை நோக்கி சுடுகிறார்கள். துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்று முன்கூட்டியே முடிவெடுத்து தயாராக வந்து சுடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது. யார் துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தார்கள். யார் அந்த வன்முறைக்கு அனுமதி அளித்தார்கள் என்று சரியான விசாரணையை கூட அரசு சார்பில் இன்னும் முடிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்ச நியாயத்தையாவது வழங்க வேண்டும்.

    தூத்துக்குடியில் மக்கள் அச்சுறுத்தப்பட்டு, அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு அமைதியை உருவாக்கி உள்ளார்கள். இது அமைதி இல்லை. இது உண்மை இல்லை. இந்த அமைதி என்பதே ஒரு வே‌ஷம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு ஜனநாயகம் இல்லை. இந்தியா முழுவதும் இதே நிலைதான் உள்ளது. மக்களிடம் பதற்றம், பயத்தை மத்திய அரசு உருவாக்கி கொண்டு இருக்கிறது. அவர்கள் வழியிலேயே தமிழக அரசும் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் நினைத்தபடி தமிழ்நாட்டில், எந்த அரசாக இருந்தாலும் வன்முறை மூலம் மக்களை அச்சுறுத்தி அடக்கி விட முடியாது. நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், கொல்லலாம். மக்கள் ஒரு அளவுக்கு மேல் பொறுமையாக பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்களின் அடிப்படை உரிமையில் கைவைக்கும் போது, நிச்சயமாக அத்தனை தடைகளையும் உடைத்துக் கொண்டு தெருவில் வந்து போராடுவார்கள்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ. சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #kanimozhimp

    Next Story
    ×