search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் வருமானவரி அதிகாரிகள் போல் நடித்து நிதி நிறுவன அதிபர் வீட்டில்  50 பவுன் நகை கொள்ளை
    X

    காஞ்சீபுரத்தில் வருமானவரி அதிகாரிகள் போல் நடித்து நிதி நிறுவன அதிபர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

    வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் சுருட்டிச் சென்ற சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robberycase

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், இந்திரா நகரில் வசித்து வருபவர் குமரவேல். நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் மாமியார் சரஸ்வதி தங்கி உள்ளார்.

    இன்று காலை குமரவேல் தனது மனைவியுடன் வெளியே சென்றார். வீட்டில் மாமியார் சரஸ்வதி மட்டும் இருந்தார்.

    காலை 7 மணி அளவில் காரில் டிப்-டாப் உடை அணிந்த 5 வாலிபர்கள் குமரவேல் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த சரஸ்வதியிடம் குமரவேல் குறித்து விசாரித்தனர். பின்னர் தாங்கள் காஞ்சீபுரம் வருமானவரித்துறை அதிகாரிகள். வீட்டில் சோதனையிட வேண்டும் என்று கூறி வீட்டுக்கதவை உள்பக்கமாக பூட்டினர்.

    மேலும் செல்போன்களையும் சுவிட்ச்ஆப் செய்யும் படி கூறி சோதனையில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் 5 வாலிபர்களும் பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டனர். அப்போது சரஸ்வதியிடம் காஞ்சீபுரம் அலுவலகத்துக்கு குமரவேலை வரும்படி கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதற்கிடையே வீட்டிற்கு வந்த குமரவேலிடம் சோதனை குறித்து சரஸ்வதி தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளிடம் விசாரித்த போது சோதனையில் ஈடுபட்டது போலியானவர்கள் என்பதும், நகை-பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு அள்ளிச் சென்றிருப்பது தெரிந்தது.

    இது குறித்து குமரவேல் காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில், வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்துள்ள கைரேகைகளை பதிவு செய்தனர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் வந்து சென்ற காரின் பதிவு எண் பதிவாகி உள்ளது. இதனை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Robberycase

    Next Story
    ×