search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

    மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.

    இதனால் அந்த அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

    இந்தநிலையில், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை 14-வது நாளாக நீடித்தது.

    கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அளந்து கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததாலும், விடுமுறை நாள் என்பதாலும் நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை கண்டு ரசித்து சென்றனர்.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 17-ந் தேதி இரவு 9 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 19-ந் தேதி, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது.

    அணையில் இருந்து நீர் மின் நிலைய மதகுகள் மூலம் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட பல மடங்கு அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 116.98 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இரவு 8 மணி அளவில் 118 அடியாக உயர்ந்தது.

    இதனால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    நீர் மின் நிலைய மதகுகள் மூலம் கூடுதலாக வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுதவிர 16 கண் பாலத்தில் உள்ள மதகுகள் வழியாக வினாடிக்கு 7,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதாவது நேற்று கூடுதலாக 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

    மொத்தத்தில் நேற்று இரவு 8 மணி முதல் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர இரவு 10 மணி முதல் சேலம் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.



    மேட்டூர் அணை வரலாற்றில் 16 கண் பாலம் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவது இது 39-வது ஆண்டு ஆகும். நேற்று 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட போது பொதுப்பணித்துறை சார்பில் அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது என்பதால், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை இன்றைக்குள் (திங்கட்கிழமை) எட்டிப்பிடித்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு இப்போது மீண்டும் நிரம்புகிறது.

    கடல் போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணையின் அழகை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இதனால் வெறிச்சோடி காணப்பட்ட மேட்டூர் அணையின் இடது கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்டி உள்ளது. ஆங்காங்கே திடீர் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரமும் ஜோராக நடக்கிறது.

    இதேபோன்று மேட்டூர் அணையையொட்டி அமைந்துள்ள பூங்காவுக்கும் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இந்த பூங்கா, 16 கண் பாலம், முனியப்பன் கோவில், அணையின் வலதுகரை ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் 16 கண் பாலம் பகுதியையொட்டி அமைந்துள்ள தங்கமாபுரி பட்டினம் மற்றும் காவிரி கரையையொட்டிய கோல்நாயக்கன்பட்டி உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் வருவாய்த்துறை மூலம் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் காவிரி ஆற்றங்கரை மற்றும் கால்வாய் கரை பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும், நீச்சல் அடிப்பதையோ, செல்பி எடுப்பதையோ, காவிரி ஆற்றின் கரையில் நின்று தண்ணீர் வரத்தை வேடிக்கை பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார். #Metturdam #Cauvery

    Next Story
    ×