search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நிரம்பி உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    மேட்டூர் அணை நிரம்பி உள்ளதை படத்தில் காணலாம்.

    5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரவு நிரம்பும் மேட்டூர் அணை

    நீர்வரத்து அதிகமாக உள்ளதால் 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரவு மேட்டூர் அணை நீர் மட்டம் தனது முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 14-ந் தேதி முதல் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வரத்தொடங்கி படிப்படியாக அதிகரித்தது.

    அதிகபட்சமாக 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து நேற்று 114 அடியை எட்டியது. இன்று காலை அணைக்கு 61 ஆயிரத்து 644 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி தண்ணர் திறந்துவிடப்படுகிறது. தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 116.98 அடியாக உயர்ந்தது. பிற்பகல் 117 அடியை எட்டியது.

    அணை நிரம்ப இன்னும் 3 அடியே தேவைப்படுகிறது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் இன்று இரவு அணைநீர் மட்டம் தனது முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணை கட்டி 83 ஆண்டுகளில் 39-வது முறையாக இந்த ஆண்டு அணை நிரம்புகிறது. கடந்த 2013-ம் ஆண்டு அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணை நிரம்புகிறது.

    அணை நிரம்பும் பட்சத்தில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் 16 கண் பாலம் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து இன்று 80 ஆயிரத்து 833 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 47 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் கபினி அணையில் இருந்து 33 ஆயிரத்து 333 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.


    இந்த தண்ணீர் நாளை மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால் நாளை முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியதால் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. 16 கண் பாலம் பகுதி முழுமையாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மேட்டூரில் குவிந்தனர்.

    அவர்கள் அணையின் இடது கரையோரம் நின்று தண்ணீரின் அழகை ரசித்து பார்த்தனர். #MetturDam
    Next Story
    ×