search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் இடமாற்றம்
    X

    ராமேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் இடமாற்றம்

    ராமேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் சிவகங்கையில் உள்ள ஆயுத குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள ஆந்தோணியார் புரத்தில் கடந்த மாதம் ஆயுதக்குவியல் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.

    இதில் போருக்கு பயன் படுத்தப்படும் வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை அடங்கும். ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்த வெடிபொருட்கள் குறித்து மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் இதன் மாதிரிகள் சென்னை வெடிபொருள் ஆய்வு மையத்துக்கு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    இதனிடையே வெடிபொருட்களை மாவட்ட நீதிபதி பாலகுமரன் ஆய்வு செய்து அதனை அழிப்பது குறித்து அறிக்கை தருமாறு சென்னை வெடிபொருள் மையத்துக்கு உத்தரவிட்டார். அந்த அறிக்கை வந்த பின்னர் தான் வெடி பொருட்களை அழிப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

    வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். ஆயுதங்களை அங்கிருந்து அகற்றாமல் போலீசார் அங்கேயே வைத்திருந்தனர்.

    சக்தி வாய்ந்த இந்த வெடிபொருட்கள் வெடித்தால் பயங்கர விளைவுகள் ஏற்படும். எனவே இதனை அகற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அதிகாரிகளும் பரிசீலித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ராமநாதபுரம் முதன்மை நீதிபதி கயல்விழி ராமேசுவரம் நீதிபதி (பொறுப்பு) பாலகுமரன், சென்னை வெடிபொருள் ஆய்வு மைய இயக்குநர் ஷேக் உசேன், ராமேசுவரம் போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ் ஆகியோர் வெடிபொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்களது முன்னிலையில் வெடிபொருட்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் சிவகங்கையில் உள்ள ஆயுத குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு வெடிபொருட்கள் அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

    Next Story
    ×