search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்கள். (உள்படம்: மாணவர் சஞ்சய் பிரசாந்த்)
    X
    முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்கள். (உள்படம்: மாணவர் சஞ்சய் பிரசாந்த்)

    வகுப்பறையை விட்டு ஆசிரியர் வெளியேற்றியதால் பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை

    பாலிடெக்னிக் மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் மறியல்- முற்றுகையில் ஈடுபட்டனர்.
    கோவை:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் சஞ்சய் பிரசாந்த் (18). இவர் கோவை பீளமேட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் உற்பத்தியியல் பிரிவில் 2-ம்ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த புதன்கிழமை பாலிடெக்னிக் வந்த மாணவர் சஞ்சய் பிரசாந்த் சக மாணவர்களுடன் வகுப்பறையில் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கிடையே மரியாதை இல்லாமல் பேசி உள்ளனர். அந்த சமயத்தில் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டு இருந்த கம்ப்யூட்டர் ஆசிரியர் முருகன் மாணவர்கள் தன்னை தான் மரியாதை இல்லாமல் பேசுவதாக கருதி உள்ளார்.

    மாணவர் சஞ்சய் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர் ஆகியோரது அடையாள அட்டையை பறித்து கொண்டு அவர்களை வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு தெரிவித்து இருக்கிறார்.

    மேலும் பெற்றோரை அழைத்து வந்தால் தான் மீண்டும் வகுப்பில் சேர்த்து கொள்வேன் எனவும் தெரிவித்து உள்ளார். ஆனால் சஞ்சய் பிரசாந்த் தனது பெற்றோரை அழைத்து வரவில்லை என கூறப்படுகிறது.

    அவரது நண்பர் பெற்றோரை அழைத்து வந்ததால் அவரை வகுப்பில் அனுமதித்து உள்ளனர். ஆனாலும் சஞ்சய் பிரசாந்த் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாலிடெக்னிக் வந்து உள்ளார். தன்னை எப்படியும் ஆசிரியர் உள்ளே அழைப்பார். வகுப்பறை சென்றால் திட்டுவார் என கருதி வெளியில் காத்திருந்து உள்ளார். ஆனால் ஆசிரியர் அழைக்கவில்லை.

    இந்த நிலையில் திருப்பூரில் உள்ள தனது வீட்டின் பாத்ரூமில் மாணவர் சஞ்சய் பிரசாந்த் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர் படித்து வந்த பாலிடெக்னிக் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து பீளமேட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பீளமேடு போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து மாணவர்கள் பாலிடெக்னிக் வளாகத்தில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

    மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலிடெக்னிக்கில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தினேஷ் ராஜ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். மாணவர்கள் போராட்டம் காரணமாக பீளமேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×