search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடனாஅணை நிரம்பி வழிவதை படத்தில் காணலாம்.
    X
    கடனாஅணை நிரம்பி வழிவதை படத்தில் காணலாம்.

    நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை - 6 அணைகள் நிரம்பின

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருவதால் 6 அணைகள் நிரம்பின. #KadanaNathiDam #RamanathiDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. குண்டாறு அணை பகுதியில் அதிகபட்சமாக இன்று 63 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 31 மில்லி மீட்டர் மழையும், கடனாநதி அணை பகுதியில் 16 மி.மீ மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 5,689 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

    இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 107.30 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 127.95 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 388 கனஅடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து 375 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 79.60 அடியாக உள்ளது.

    கடனாநதி மற்றும் ராமநதி அணைக்கு அதிகளவில் தண்ணீர் வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    கடனாநதி அணையின் உச்சநீர் மட்டம் 85 அடியாகும். அங்கு இன்று காலை 83.50 அடி நீர்மட்டம் உள்ளது. அணை பாதுகாப்பை கருதி தற்போது வரும் தண்ணீர் அனைத்தும் திறந்துவிடப்படுகிறது. இதனால் கடனாநதி அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ராமநதி அணை நிரம்பியதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ராமநதி அணைக்கும் தண்ணீர் அதிகமாக வருகிறது. ஒரேநாளில் நீர் மட்டம் 2.5 அடி உயர்ந்து இன்று 82.50 அடியாக உயர்ந்துள்ளது. ராமநதி அணையின் உச்சநீர் மட்டம் 84 அடியாகும். அந்த அணையும் நிரம்பியதால் தண்ணீர் அனைத்தும் திறந்து விடப்படுகிறது. கருப்பாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கனவே நிரம்பி வழிகிறது.

    இதுபோல கொடுமுடியாறு அணை நீர்மட்டம் இன்று 47 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் 5 அடி உயர்ந்தால் அந்த அணையும் முழு கொள்ளளவை எட்டிவிடும். அடவிநயினார் அணையின் நீர்மட்டம் இன்று 127 அடியாக உயர்ந்துள்ளது.

    இந்த அணையின் உச்சநீர் மட்டம் 132 அடியாகும். மேலும் 5 அடி உயர்ந்தால் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும். அடவிநயினார் அணைக்கு தண்ணீர் வேகமாக வருவதால் நேற்றைவிட இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. எனவே அந்த அணையும் இன்று நிரம்பி என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் தற்போது கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகிய 6 அணைகளும் நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அந்த பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.

    இதுபோல பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்தும் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அந்த பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட குளங்களும் நிரம்பி உள்ளது. மேலும் ஏராளமான குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குண்டாறு-63
    அடவிநயினார்-31
    கடனாநதி-16
    பாபநாசம்-11
    செங்கோட்டை-10
    ராமநதி-8
    தென்காசி-7
    சேர்வலாறு-6
    சங்கரன்கோவில்-3
    சிவகிரி-2
    மணிமுத்தாறு-1.2  #KadanaNathiDam #RamanathiDam
    Next Story
    ×