search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு - லட்சக்கணக்கான வாழைகள் தண்ணீரில் மூழ்கியது
    X

    பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு - லட்சக்கணக்கான வாழைகள் தண்ணீரில் மூழ்கியது

    பவானி சாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் வாழை தோட்டங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் லட்சக்கணக்கான வாழைகள் தண்ணீரில் மூழ்கியது.
    மேட்டுபாளையம்:

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் ஏராளமான அணைகள், ஏரிகள் நிரம்பி வருகிறது.

    ஊட்டியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. திடீரென மதியம் 2 மணியளவில் நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    பவானி ஆற்றின் பாலம் அருகே கரையோரத்தில் கட்டப்பட்ட பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்து கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. சிறுமுகை அருகே லிங்காபுரம் அடுத்துள்ள காந்தையாற்று சாலையில் காந்தையாற்றின் குறுக்கே பவானி சாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் கட்டபட்ட உயர்மட்ட பாலத்திற்கு அடியில் வெள்ளம் அதிகரித்து ஓடியது.

    இதே போல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் இன்னும் சில தினங்களில் பாலம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உருவாகி உள்ளது. பவானி சாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் வாழை தோட்டங்களுக்குள் வெள்ளம் புகுந்து லட்சக்கணக்கான வாழைகள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது. இதனால் வாழை விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் .

    இந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அந்த தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேட்டுபாளையம் தாசில்தார் புனிதா பவானி ஆற்றின் கரையோரப்பகுதியில் உள்ள தேக்கம்பட்டி, நெல்லிதுறை, மேட்டுபாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை பகுதிகளுக்கு சென்று ஆற்றில் வெள்ளப் பெருக்கை பார்வையிட்டார். வெள்ளப் பெருக்கு குறித்து மேட்டுபாளையம் மற்றும் கிராமங்களில் தண்டோரா மூலமும், ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலமும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து தெரியபடுத்தபட்டு வருகிறது. வழிபாட்டு ஸ்தலங்களில் உள்ள ஒலிபெருக்கி மூலமும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது .

    பொதுப்பணித்துறை பாசன பிரிவு உதவி பொறியாளர் பொங்கியண்ணன் மேற்பார்வையில் பணியாளர்கள் தேக்கம்பட்டி, நெல்லிதுறை மேட்டுபாளையம் ஆகிய கரையோரப்பகுதிகளில் பாதுகாப்பு கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    Next Story
    ×