search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவனை மசாஜ் செய்ய வைத்த பள்ளி ஆசிரியர்- உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பெற்றோர் புகார்
    X

    மாணவனை மசாஜ் செய்ய வைத்த பள்ளி ஆசிரியர்- உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பெற்றோர் புகார்

    மாணவனை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பள்ளி மாணவர் ஒருவர் தனது ஆசிரியருக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ காட்சி கடந்த வாரம் வேகமாக பரவியது. இந்த தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி பழனி கல்வி மாவட்ட அலுவலர் கருப்புசாமிக்கு, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். அதன்பேரில், பள்ளிக்கு நேரில் சென்று கருப்புசாமி விசாரணை நடத்தினார். பின்னர், முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமாரும் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவன், ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவனுடன் அவனது பெற்றோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில் மாணவனின் தந்தை கூறியிருப்பதாவது:-

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எனது மகனை ஆசிரியர் ஒருவர் ஓய்வு அறைக்கு அழைத்து சென்று, அவனை மிரட்டி மசாஜ் செய்ய வைத்துள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, பள்ளிக்கு சென்ற எனது மகனை சக மாணவர்கள் ‘எனக்கும் மசாஜ் செய்துவிடு’ என்றுகூறி கேலி செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவன் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்கிறான்.

    இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் எனது மகனை அழைத்து மசாஜ் செய்தது நாடகத்திற்காக எடுக்கப்பட்ட ஒத்திகை என்று கூறுமாறும், இல்லையென்றால் உன்னை பள்ளியில் படிக்க விடமாட்டேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

    இதனால், அவன் பள்ளிக்கு செல்லவே பயப்படுகிறான். எனது மகனின் எதிர்காலம் குறித்து எங்களுக்கு கவலையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×