search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
    X
    கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

    கண்டமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.16 லட்சம் நகை-பணம் கொள்ளை

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் ரூ.16 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பண்ணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 55). தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி அமிர்தலட்சுமி. இவர் பண்ணக்குப்பம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகள் சரண்யாவுக்கு அடுத்த மாதம் 31-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது.

    இதற்காக கோவிந்த ராஜன் 60 பவுன் நகை மற்றும் பட்டுப்புடவை வாங்கி வீட்டில் வைத்திருந்தார். நேற்று இரவு கோவிந்த ராஜன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவிந்தராஜ் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த 60 பவுன் தங்க நகை மற்றும் ரூ.6,500 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    வீட்டில் மேல்அலமாரியில் இருந்த சூட்கேசை எடுத்து திறந்து பார்த்தனர். அதில் இருந்த பட்டுப்புடவைகளை எடுத்து கொண்டு சூட்கேசை வீட்டுக்கு வெளியே வீசினர். பின்னர் நகை-பணம், பட்டுப் புடவைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.

    காலையில் கண்விழித்து பார்த்த அமிர்தலட்சுமி வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தனது கணவர் கோவிந்தராஜனை எழுப்பினார்.

    உடனே 2 பேரும் மற்றொரு அறைக்கு சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகை-பணம் மற்றும் பட்டு புடவைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை பார்த்து திடுக்கிட்டனர்.

    இது குறித்து கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர். கொள்ளை சம்பவம் குறித்து கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×