search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.ஆர்.எஸ். அணை
    X
    கே.ஆர்.எஸ். அணை

    காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள் வெளியேற்றம்

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. #KarnatakaDams #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா, பகுதிகளில் 3 வாரங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு அங்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் குடகு, மாண்டியா மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    124 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 123.21 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 51 ஆயிரத்து 676 கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து 73 ஆயிரத்து 159 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை அணையின் நீர்மட்டம் 123.2 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து 66 ஆயிரத்து 240 அடியாக இருந்ததால் அணையில் இருந்து 80 ஆயிரத்து 712 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இதே போல கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ததால் கபினி அணைக்கு நேற்று 40 ஆயிரத்து 2 கன அடி தண்ணீர் வந்தது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 81.27 அடியாக இருந்ததால் அணையில் இருந்து 40ஆயிரத்து 416 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    கபினி அணை நீர்மட்டம் இன்று காலை 81.66 அடியாக இருந்தது. அணைக்கு 36 ஆயிரத்து 137 கன அடி தண்ணீர் வந்த நிலையில் அணையில் இருந்து 32 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள 1 லட்சத்து 13 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் சீறி பாய்ந்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை ஒகேனக்கல் காவிரி ஆற்றிக்கு வந்தடைந்தது. இதனால் காலையில் 44 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து பிற்பகல் 3 மணிக்கு 60 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 9 மணியளவில் 80 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.

    இன்று காலை ஒகேனக்கலில் நீர்வரத்து மேலும் அதிகரித்து 96 ஆயிரம் கன அடியானது. நீரின் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் மத்திய நீர்பாசன அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐவர் பாணி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.

    கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ஒகேனக்கல்லுக்கு அதிகபட்சமாக 1 லட்சத்து 78 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் 96 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் பொங்கி பாயும் வெள்ளத்தால் இன்று 8-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் ஒகேனக்கல் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அவர்கள் கால்நடைகளையும், மேடான இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதில் சில இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    போலீசாரும் ஊர்காவல் படையினரும் காவிரி கரையோரப் பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். காவிரி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தீயணைப்பு துறை, வருவாய்த் துறை, பொதுப் பணி மற்றும் வனத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆறு செல்வதால், ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கும் தண்டோரா மூலம் காவிரி ஆற்றை கடக்க வேண்டாம் என்றும், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    தமிழக-கர்நாடக எல்லை பகுதியான ஒகேனக்கலை அடுத்துள்ள மாறுகொட்டாய் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒகேனக்கல்லுக்கு பரிசலில் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். மேலும் இவர்களது குழந்தைகள் ஒகேனக்கல் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    கடந்த 1 வாரமாகவே காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. வெளியூரில் விடுதிகளில் தங்கி படித்து வரும் மாறுகொட்டாய் கிராம மாணவ-மாணவிகளை சொந்த ஊருக்கு வர வேண்டாம் என்று அவர்களது குடும்பத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    பிலிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் அணை வரையிலான காவிரி கரையோரத்தில் வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணம் இல்லா தொலைபேசி 1077 ஐ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டறையில் 24 மணி நேரமும் தொடர்ந்து அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் நேற்று காலை 46 ஆயிரத்து 613 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 60 ஆயிரத்து 120 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து 1 லடசத்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று மாலை 1 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று 83.2 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 87.92 அடியாக உயர்ந் தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிற்பகல் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள அணைகளில் இருந்து மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    வழக்கமாக மேட்டூர் அணை 90 அடியை எட்டும் போது காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். இன்று பிற்பகலுக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்ட வாய்ப்புள்ளதால் ஓரிரு நாளில் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அல்லது நாளைக்குள் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

    மேட்டூர் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட காட்சி.


    மேட்டூர் அணைக்கு இன்று பிற்பகல் முதல் 1 லட்சம் கன அடி தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் மேட்டூர் காவிரிக்கரையில் உள்ள அடிப்பாலாறு, செட்டிபட்டி, பண்ணவாடி, மூலக்காடு, தின்னப்பட்டி, சின்ன மேட்டூர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் ,கிராம உதவியாளர்கள் மூலம் தண்டோரா அடித்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கரையோரங்களில் இருந்த மீனவர்கள் மேடான பகுதிகளுக்கு முகாம்களை மாற்றி வருகிறார்கள்.

    விவசாயிகள் தங்களது விளை பயிர்களை அப்படியே விட்டு விட்டு கிராமங்களை நோக்கி செல்கிறார்கள். விடுமுறை நாளான நேற்று பண்ணவாடி பகுதியில் கடல் போல காட்சியளிக்கும் காவிரியை காண மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு சென்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து ஓரிரு நாளில் காவரி ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் உள்பட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தண்டோரா அடித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையில் கரையோர குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் முன்னதாகவே தங்கள் உடமைகளையும், பொருட்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் எனவும், கரையோர விவசாயிகள் வெள்ள நீர் வடிகால்களை அமைப்பதுடன் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு தங்கள் கால்நடைகள் செல்லாத வண்ணம் கவனித்திட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் கரையோர மக்கள் ஆற்றில் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் , கரையோர மீனவர்கள் வெள்ள பெருக்கினை கவனத்தில் கொண்டு முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், பயணிகள் விசைப்படகுகளை ஓட்டுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மிதமான வேகத்தில் பாதுகாப்பான பகுதிக்குள் விசைப்படகை செலுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. #KarnatakaDams #Cauvery #WaterReleased
    Next Story
    ×