search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் கைதான பயிற்சியாளர் அளித்த முகவரி உண்மையா? சென்னை போலீசார் விசாரணை
    X

    கோவையில் கைதான பயிற்சியாளர் அளித்த முகவரி உண்மையா? சென்னை போலீசார் விசாரணை

    கோவை கல்லூரியில் பேரிடர் பயிற்சியின்போது மாணவி உயிரிழக்க காரணமான பயிற்சியாளர் அளித்த முகவரி உண்மைதானா? என்பது குறித்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #CoimbatoreStudent #Logeshwari
    கோவை:

    கோவை கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது, மாணவி லோகேஸ்வரி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சென்னையைச் சேர்ந்த அவர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சி பெறவில்லை என்றும், போலியான சான்றிதழ்களை தயாரித்து பயிற்சி அளித்து வந்ததும் தெரிவந்துள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    இந்த சம்பவத்துக்கு காரணமான பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவி கீழே விழுந்த வீடியோ பதிவு உள்ளது. அதன் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கும் போது சில விதிமுறைகள் உள்ளன. அவை பின்பற்றப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பயிற்சியாளர் ஆறுமுகம் அந்த கல்லூரிக்கு அவராகவே சென்று பயிற்சி அளிப்பதாக கூறி உள்ளார். இதற்காக கடந்த 3-ந் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து வந்ததாக கூறி ஒரு கடிதத்தை கல்லூரி முதல்வரிடம் கொடுத்து இருக்கிறார். அந்த கடிதத்தில் முத்திரை கூட கிடையாது. அந்த கடிதத்தை அவராகவே தயாரித்ததாக தெரிகிறது. அது போலி கடிதம் ஆகும்.

    மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் அவர் பயிற்சி பெற்றதாக கூறி உள்ளார். அந்த சான்றிதழ்கள் போலியானது என்று தற்போது தெரியவந்து உள்ளது. அவர் அங்கு பயிற்சி பெறவில்லை.

    அவர் போலி சான்றிதழ்களை கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக கோவை மற்றும் பிற மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதன் மூலம் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது மேலும் சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். பயிற்சியாளர் அளித்த முகவரி உண்மையானது தானா? என்றும் சென்னை போலீசார் மூலம் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #CoimbatoreStudent #Logeshwari #MockTrainer #MockDrill #DisasterDrill
    Next Story
    ×