search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மாணவி உயிரிழப்பு - தனியார் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு
    X

    கோவை மாணவி உயிரிழப்பு - தனியார் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

    கோவை மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நாதே கவுண்டன்புதூரை சேர்ந்தவர் நல்லாகவுண்டர். இவரது மகள் லோகேஸ்வரி(வயது 19) நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை வண்டலூரை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம்(31) தலைமையிலான குழுவினர் பயிற்சி அளித்தனர்.

    ஆபத்து காலங்களில் ஜன்னல் வழியாக மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தனர். 3 மாடிகள் கொண்ட கல்லூரி வளாகத்தின் கீழ் பகுதியில் பெரிய வலையை கட்டி மாடியில் இருந்து மாணவர்களை கீழே குதிக்க அறிவுறுத்தினார்.

    அப்போது 2-வது மாடியில் இருந்து மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே குதிக்குமாறு கூறினார். உயரத்தை பார்த்து லோகேஸ்வரிக்கு பயம் வந்தது. நான் கீழே குதிக்க மாட்டேன் என மாணவி நடுங்கினார்.

    ஆனால் அவரை கீழே குதித்தே ஆக வேண்டும் என பயிற்சியாளர் ஆறுமுகம் கட்டாயப்படுத்தினார். என்றாலும் லோகேஸ்வரி கீழே குதிக்க மறுத்ததோடு, பக்கவாட்டுச் சுவரையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இதனால் பொறுமையிழந்த பயிற்சியாளர் ஆறுமுகம், மாணவியை கீழே தள்ளி விட்டார். இதனால் சுழன்று விழுந்த லோகேஸ்வரி முதல்மாடியின் ‘சன் ஷேடு’ மீது தலைகீழாக விழுந்து படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த சக மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரத்தவெள்ளத்தில் துடித்த மாணவியை மீட்டு தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மாணவி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப் பட்டார். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    கல்லூரி சென்ற மகள் இறந்த தகவலறிந்து அவரது பெற்றோர், உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    இதுதொடர்பாக மாணவியின் தந்தை நல்லாகவுண்டர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.

    அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2)- (இறப்பை உண்டாக்கும் என்று தெரிந்து கொண்டே உயிரிழப்பை ஏற்படுத்துதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த பிரிவில் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கல்லூரியில் இதுபோன்ற பயிற்சிகளை அளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னர், தீயணைப்பு துறையினர் முன்னிலையில் இதுபோன்ற பயிற்சிகளை கொடுக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. ஆனால் அதை பின்பற்றாதாலேயே மாணவி உயரிழப்பு நிகழ்ந்துள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறினர்.

    இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி கூறியதாவது:-

    சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளார். பயிற்சியாளர் மீது மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாணவி கீழே விழுந்தது தொடர்பான வீடியோ பதிவு உள்ளது. அதன்மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை அளிக்கும் போது சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை செய்யாமலேயே பயிற்சி அளிக்கப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் தவறு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதற்கிடையே மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×