search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 60 சதுரங்க தூண் - அழகிய சிற்பம் மாயம்
    X

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 60 சதுரங்க தூண் - அழகிய சிற்பம் மாயம்

    ஏகாம்பரநாதர் கோவிலில் பராமரிப்பு பணியின் போது அழகிய சிற்பங்கள் மற்றும் சதுரங்கத் தூண்கள் 60, பல உருளைத் தூண்கள் காணாமல் போய் உள்ளன. இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KanchipuramEkambareswararTemple

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் பல்லவ மன்னர் கலை நுட்பத்துடன் இரட்டை திருமாளிகையை உருவாக்கினார். இந்த திருமாளிகை சீரமைப்பு பணியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சிவபக்தர் அண்ணாமலை என்பவரின் மகன் டில்லிபாபு என்பவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    காஞ்சீபுரத்தில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கடந்த 2014-ம் ஆண்டில் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மற்றும் இரட்டை திருமாளிகை ஆகியவற்றை புனரமைக்க 1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கோயில் நிர்வாகம் சார்பில் தன்னிச்சையாக எந்தவித திட்ட மதிப்பீடும் இல்லாமல் அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்தபதியின் கருத்து இல்லாமல் இணையதளம் மூலம் நன்கொடை வேண்டி விளம்பரம் செய்துள்ளனர்.

    பழங்கால கோயில் என்பதால் புனரமைப்புப் பணிக்கு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. இந்த புனரமைப்புப் பணியின் போது அழகிய சிற்பங்கள், சதுரங்கத் தூண்கள் 60, பல உருளைத் தூண்கள் காணாமல் போய் உள்ளன.

    இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியும் உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி மீனாட்சி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருப்பணி ஆணையர் கவிதா, வேலூர் இணை ஆணையர் சிவாஜி, காஞ்சீபுரம் துணை ஆணையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் முருகேசன், பொறியியல் கண்காணிப்பாளர் பால சுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KanchipuramEkambareswararTemple

    Next Story
    ×