search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஐம்பொன் சிலையை போலீசாரிடம் ஒப்படைத்த கோவில் அதிகாரிகள்
    X

    கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஐம்பொன் சிலையை போலீசாரிடம் ஒப்படைத்த கோவில் அதிகாரிகள்

    கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பழனி மூலவர் சன்னதியில் வைக்கப்பட்ட ஐம்பொன் சிலையை கோவில் அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.#Idolsmuggling

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் மூலவராக உள்ள தண்டாயுதபாணி சுவாமி சிலை நவபாஷாணத்தால் போகர் எனும் சித்தரால் செய்யப்பட்டது. 5 ஆயிரம் ஆண்டு பழமையான இச்சிலை சேதமடைந்து வருவதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில் மறைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் புதிதாக தங்கத்தில் சிலை செய்யஆலோசனை வழங்கினார். இதன் பின்னர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஏற்பாட்டில் ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி இரவு புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலை பழனி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 26-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலவர் தண்டாயுதபாணி சிலைக்கு முன்பாக புதிய ஐம்பொன் சிலை நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

    புதிதாக வைக்கப்பட்ட ஐம்பொன் சிலையை மூலவர் சன்னதியில் வைக்கக்கூடாது என்றும், ஒரு கருவறையில் 2 மூலவர்கள் வைப்பது ஆகமவிதிபடி குற்றமாகும் என்றும் பக்தர்கள் ஆன்மீக பெரியோர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி அன்று புதிதாக வைக்கப்பட்ட ஐம்பொன் சிலை கருவறையில் இருந்து எடுக்கப்பட்டு உட்பிரகாரத்தில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு அதற்கு தினசரி நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு வந்தது.

    இந்த சிலை அமைத்ததில் மோசடி நடந்தது தெரியவரவே ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா, நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன், உதவி ஆணையர் புகழேந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலிடம் விசாரணை செய்ய முயன்ற போது அவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜராகி சரணடைந்தார். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

    வழக்கு விசாரணைக்காக ஐம்பொன் சிலையை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையில் டி.எஸ்.பி வெங்கட்ராமன், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் நேற்று வந்தனர்.

    சிலையை ஒப்படைக்கும் முன் ஐம்பொன் சிலையில் இருந்த சக்தியை கும்பத்தில் ஆவாகனம் செய்து பின்னர் மூலவருக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் ஐம்பொன் சிலை சக்தி இழந்த சிலையாக மாற்றப்பட்டது.

    இன்று காலையில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் வருவாயத்துறையினர் ஐம்பொன் சிலையை பிரத்யேகமாக செய்யப்பட்ட பெட்டியில் வைத்தனர்.

    முன்னதாக சிலையில் எடை மற்றும் உயரம் ஆகியவை அளவீடு செய்யப்பட்டது. எடை 219 கிலோ 52 கிராம் இருந்தது. சிலை வைத்த பிறகு பெட்டி பேக்கிங் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின் இழுவை ரெயில் மூலம் கீழே கொண்டு வரப்பட்டது.

    அதன் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கோவில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன் பின் வேன் மூலம் பேக்கிங் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்பட்டது. ஐம்பொன்சிலையை மலைக் கோவிலில் இருந்து கீழே கொண்டு வரும் வரை ஏராளமான பக்தர்கள் மிகுந்த கவலையுடன் பார்த்தது கண்கலங்க வைத்தது. #Idolsmuggling

    Next Story
    ×