search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது. இதனால் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கன மழை கொட்டி தீர்க்கிறது.

    இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

    கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 82.14 அடியை நெருங்கியது. (மொத்த கொள்ளளவு 84 அடி) இதே போல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 112.70 அடியாக (மொத்த கொள்ளளவு 124.80 அடி) உயர்ந்துள்ளது.

    இதையடுத்து கபினி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டது. இன்று காலை அணைக்கு 35 ஆயிரத்து 685 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர் திறப்பு 35 ஆயிரத்து 565 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தும் 3 ஆயிரத்து 571 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணைக்கு 31 ஆயிரத்து 490 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்தும் திறக்கப்பட்ட 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து வருகிறது.

    நேற்று காலை இந்த தண்ணீர் தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வந்து சேர்ந்தது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 2600 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 5600 கன அடியாகவும் பிற்பகல் 21 ஆயிரம் கன அடியாகவும் உயர்ந்தது. இது மாலை 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

    ஒகேனக்கல் காவிரி ஆற்றின் இருபுறங்களையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடி செல்வதால் அருவிகளில் குளிக்க நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது.

    இன்று 2-வது நாளாக இந்த தடை நீடிக்கிறது. இதேபோல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவி பக்கம் யாரும் செல்லாத வகையில் அதி காரிகள் ஒகேனக்கல்லில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பிலிகுண்டுலுவில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது. நேற்று காலை 1533 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை இது 14 ஆயிரத்து 334 கன அடியாக அதிகரித்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 63.72 அடியாக நீர்மட்டம் இன்று காலை 65.15 அடியாக உயர்ந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 40 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுமையாக வந்து சேரும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் வாய்ப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் பொழுது காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×