search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் பசுமை சாலைக்காக குட்டி விமானம் மூலம் வனப்பகுதியில் நிலம் அளவீடு
    X

    திருவண்ணாமலையில் பசுமை சாலைக்காக குட்டி விமானம் மூலம் வனப்பகுதியில் நிலம் அளவீடு

    செங்கம் ஆத்திப்பாடி, அயோத்தியாபட்டினம், கட்டமடுவு உள்பட மாவட்டம் முழுவதும் கையகப்படுத்தக்கூடிய அடர்ந்த வனப்பகுதிகள், குட்டி விமானம் (ஹெலிகேம்) மூலம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. #GreenWayRoad

    திருவண்ணாமலை:

    சென்னை-சேலத்திற்கு 3 மணி நேரத்தில் விரைவாக பயணிக்க காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக 277 கிலோ மீட்டர் தொலைவு பசுமை சாலை அமைக்கப்படுகிறது.

    இத்திட்டத்தால், திருவண்ணாமலை மாவட்டம் தான் அதிகம் பாதிக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் 122 கிலோ மீட்டருக்கு பசுமை சாலை அமைகிறது.

    இதற்காக அரசு புறம்போக்கு நிலங்கள் 155 ஹெக்டேர் மற்றும் 5400 விவசாயிகளிடம் நன்செய் 100 ஹெக்டேர், புன்செய் 605 ஹெக்டேர் என மொத்தம் 860 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.

    தற்போது, 925 விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விடுபட்ட பணி வரும் 20 நாட்களுக்குள் விரைந்து முடிக்கப்படும் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுவரை நிலம் கையகப்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து 63 பேர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.

    அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அரசு வேலை மற்றும் மாற்று இடம் வழங்கும் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.

    செங்கம் ஆத்திப்பாடி, அயோத்தியாபட்டினம், கட்டமடுவு உள்பட மாவட்டம் முழுவதும் கையகப்படுத்தக்கூடிய அடர்ந்த வனப்பகுதிகள், குட்டி விமானம் (ஹெலிகேம்) மூலம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

    செங்கம் நீப்பத்துறையில் ஏற்கனவே நிலம் அளவீடு செய்து பதிக்கப்பட்ட விளை நிலங்களையும், அதன் வழியாக செல்லும் சாலை வழித்தடத்தையும் குட்டி விமானம் மூலம் அதிகாரிகள் படம் பிடித்தனர்.


    விளை நிலங்கள் மற்றும் விளை நிலத்தில் உள்ள மரம், கிணறு, பயிர், கட்டிடங்கள் போன்றவற்றுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவே குட்டி விமானம் மூலம் படம் எடுக்கப்பட்டு ஆதாரம் பதிவு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேத்துப்பட்டு அடுத்த இஞ்சிமேடு, அல்லியந்தல், பெரணம்பாக்கம், தச்சாம்பாடி ஆகிய கிராமங்களில் நிலம் அளவிடும் பணி நடந்தது. விவசாயிகள் கண்ணீருடன் கதறிவிட்டு அழுதனர்.

    இஞ்சிமேட்டில் முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி என்பவர், தனது நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நாட்டுக்காக உழைத்த என்னுடைய வீட்டை பறிக்கிறீர்களே எனக்கூறி வேதனைப்பட்டார்.

    மேலும், விவசாய நிலத்தை வீட்டுமனைகளாக மாற்ற பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பசுமை சாலை என்ற பெயரில் விவசாய நிலத்தை அழிக்க மத்திய- மாநில அரசுகளே தீவிரம் காட்டுவது புரியாத புதிராக உள்ளது.

    விவசாய நிலத்தை அழித்து விட்டு உணவுக்காக வெளிநாட்டிடம் கையேந்தும் நிலை வரும். பசி, பட்டினி, பஞ்சம் வந்த போதும் சோறு போடும் நிலத்தை விற்றதில்லை.

    வட்டிக்கு கடன் வாங்கி பயிர் செய்து, தண்ணீரின்றி கருகினாலும் விவசாயிகள் நிலத்தை விற்றதில்லை.

    கருகிய பயிரை கண்டு வாடி விவசாயிகளும் மடிந்து விடுகின்றனர். விவசாயிகள் தற்கொலை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.

    இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று நிலத்தை பறிகொடுத்த விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரி (50) என்ற பெண் விவசாயி, பறிபோகும் தனது நிலத்தில் நெற் பயிரை கைகளால் அணைத்து கதறி அழுதார்.

    எங்கள் நிலமெல்லாம் பாழாக போகுதே, இனி எப்படி உயிர் வாழப் போகிறோம் என தலையில் அடித்து கொண்டு கதறினார்.

    விவசாயிகளின் எதிர்ப்பு அதிகமாக இருந்ததால், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் தொடர்ந்தனர்.

    போளூர் அருகே உள்ள ராந்தம், விளாப்பாக்கம், பெலாசூர் ஆகிய 3 கிராமங்களிலும் இன்று நிலம் அளவீடு பணி நடந்தது.

    கூடுதலாக ஆயுதப்படை போலீசாருடன் கண்ணீர் புகை குண்டு வீசும் வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

    விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் பதட்டம் அதிகரித்துள்ளது. #GreenWayRoad

    Next Story
    ×