search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி
    X

    தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

    பா.ஜனதாவுக்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என்று காங்கயத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார். #thirunavukkarasar #bjp

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ப.கோபி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி.குப்புசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் காட்டூர் வெங்கடாச்சலம், பொங்கலூர் வட்டார தலைவர் தியாகராஜன், மற்றும் காங்கயம், வெள்ளகோவில், பொங்கலூர், அவினாசி, பல்லடம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு மூன்றாவதாக மூத்தநீதிபதி ஒருவரை நியமித்து தற்போது வழக்கு விசாரணை தொடங்கி இருப்பது நல்லது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை மீண்டும் தள்ளி வைத்து இருப்பது கண்டிக்க தக்கது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும். தற்போது சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மக்கள் போராடி வருகிறார்கள். மக்கள் விருப்பத்திற்கு எதிராக திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சி செய்யக்கூடாது. பா.ஜனதாவுக்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை. எனவே மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்தாமல் தமிழக மக்களை தொல்லைகளுக்கு உள்ளாக்கும் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறது.

    தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து விட்டதாக கனவுலகில் மிதந்து வருகிறது. டெல்லி கவர்னர் வி‌ஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அது அனைத்து மாநில கவர்னர்களுக்கும் பொருந்தும். அதன்படி கவனர்கள் நடந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு வேறு அல்ல. மத்திய அரசு வேறு அல்ல, இரண்டும் பா.ஜனதா அரசுதான். பா.ஜனதா மற்ற மாநிலங்களில் ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சி நடத்துகிறது. ஆனால் தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறது. தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். காங்கயத்தில் இரும்பு தாது எடுக்கும் விவகாரத்தில் மக்கள் பக்கம் காங்கிரஸ் நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #bjp

    Next Story
    ×