search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க சில அமைப்புகள் போராட்டம்: பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
    X

    தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க சில அமைப்புகள் போராட்டம்: பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

    தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியை தடுக்க சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். #ponradhakrishnan

    கோவை:

    கோவை இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிடத்தில் தொழில் துறையினர் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்தியாவில் தமிழகத்தில் ஒட்டு மொத்த தொழில் வளர்ச்சி மேற்கு மாவட்டம் மூலம் தான் வருகிறது. தனியார் மூலம் 75 சதவீத வளர்ச்சி இங்கு இருந்து தான் வருகிறது.

    ஆனால் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் வரக்கூடாது என பல அமைப்புகள் முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக சேலம்-சென்னை பசுமை வழிசாலை வரக்கூடாது என போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி மேற்கு மாவட்டத்தில் இருந்து வருகிறது. இந்த சாலை திட்டத்தை தடுத்தால் தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம். தமிழகம் முன்னேற கூடாது என போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார். விமான நிலையம், ரெயில் சாலை, கட்டுமான பணிகள் என எல்லா வகை திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் எல்லா சாலைகளும் போடப்பட்டு வருகிறது. ரூ. 600 கோடி செலவில் கோவை-பொள்ளாச்சி சாலை பணி நடைபெற்று வருகிறது.

    உங்களுக்கு என்ன தேவைகள் என என்னிடம் கேட்டால் உங்களுடன் இருந்து செய்து தருகிறேன். இந்தியாவில் 4 இடங்களில் பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளது. அதில் கோவையும் ஒன்றாகும்.

    கோவையில் பஸ்போர்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இங்கு பஸ்போர்ட் அமைந்தால் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 4 மாவட்டங்கள் முன்னேற்றம் அடையும்.

    வடகோவை ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    கோவைக்கு வந்த 6 ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுபோல் மதுரைக்கு வரும் 4 ஜெட் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்து உள்ளேன்.

    கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

    மேற்கு மாவட்ட வளர்ச்சியால் தான் தமிழக வளர்ச்சி அமையும். இங்குள்ள தொழில் அதிபர்கள் கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வர வேண்டும். அதற்கான எந்த உதவியும் செய்து தர தயாராக உள்ளேன்.

    ராணுவ தளவாடங்கள் தயாரிக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக ராணுவ மந்திரியிடம் கூட்டம் நடத்தி கோவையில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய பொது செயலாளர் முரளிதரராவ், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் வனிதா மோகன், கொடிசியா தலைவர் சுந்தரம், கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா மாநில பொது செயலாளர் வானதிசீனிவாசன், ரவிசாம் மற்றும் தொழில் துறையினர் கலந்து கொண்டனர். #ponradhakrishnan

    Next Story
    ×