search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: வெள்ளத்தில் சிக்கி பெண் பலி - சிறுவன் கதி என்ன?
    X

    சேலத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: வெள்ளத்தில் சிக்கி பெண் பலி - சிறுவன் கதி என்ன?

    சேலத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி பெண் பலியானார். வெள்ளத்தில் மாயமான சிறுவனை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தேடி வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் மாநகரில் நேற்று இரவு 10 மணிக்கு மழை தொடங்கியது. நேரம் ஆக ஆக மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கியது.

    பயங்கர இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை அதிகாலை 1 மணி வரை இடைவிடமாமல் கொட்டி தீர்த்தது. வானமே பொத்து கொண்டு ஊத்தியது போல 3 மணி நேரம் மழை நீடித்தது. அதன் பிறகும் மழை விடிய விடிய தூறி கொண்டே இருந்தது.

    இதனால் மாநகரில் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சேலம் 4 ரோடு, பெரமனூர், நாராயண நகர், சங்கர்நகர், கிச்சிப்பாளைம், குகை, ஜான்சன் பேட்டை, ராமகிருஷ்ணாரோடு, சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை பச்சப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.

    அம்மாபேட்டை பகுதியில் பெய்த கன மழையால் குமரகிரி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள பச்சப்பட்டி அசோக் நகர் பகுதியில் 1-வது கிராஸ் முதல் 3-வது கிராஸ் வரை உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது.

    இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் விடிய விடிய தூங்க முடியாமல் தவித்தனர். இன்று காலையும் அந்த பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பொதுமக்கள் சாலையில் திரண்டிருந்தனர். இன்று காலை வரை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் அந்த பகுதிக்கு செல்லாததால் பொதுமக்கள் ஆவேசத்துடன் சாலையில் நின்றனர்.

    இதே போல சேலம் ரெட்டியூர் ஸ்ரீராம்நகர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்றிரவு மழை நீர் புகுந்தது. வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இன்று காலை வரை முழங்கால் அளவுக்கு வீட்டினுள் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.

    பெரமனூர் நாராயண நகர், கிச்சிப்பாளையம், மணக்காடு, சங்கர்நகர், அழகாபுரம், சூரமங்கலம் களரம்பட்டி புலிக்குத்தி தெரு, திருவாகவுண்டனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் சாக்கடை நீருடன், மழை நீரும் கலந்து சாலையில் ஆறாக ஓடியதால் அந்த பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் அந்த பகுதி மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய தவித்தனர். மேலும் பாத்திரங்கள் மூலம் தண்ணீரை எடுத்து வெளியே ஊற்றினர். ஆனாலும் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.

    அம்மாபேட்டை பாரதியார் தெரு, ஜோதி டாக்கீஸ் ரோடு, பாலாஜிரோடு, புதுத்தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்களில் எடுத்து வெளியில் ஊற்றினர். இதனால் அந்த பகுதி மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஊத்துமலையில் நேற்றிரவு கன மழை பெய்தது. இதனால் மலையில் இருந்து காட்டாற்று வெள்ளம் போல வந்தது. இந்த வெள்ளம் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

    இதனால் மதுரை, திருச்சி செல்லும் பஸ்கள் சீல நாயக்கன் பட்டியில் இருந்து கந்தம்பட்டி பைபாஸ் வரை நீண்ட தூரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதே போல சிவதாபுரம் செல்லும் வழியில் கந்தம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் பின்புறம் உள்ள ரெயில்வே தரை பாலத்தில் 5 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இன்று காலையும் அதே நிலை நீடித்ததால் சிவதாபுரம் செல்லும் மக்கள் சீலநாயக்கன்பட்டி, நெய்க்காரன்பட்டி வழியாக 7 கி.மீ. சுற்றி சென்றனர். இதனால் அந்த பகுதியினர் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை 1.30 மணியளவில் கிச்சிப்பாளையம் நாராயண நகரில் வீட்டில் இருந்து சாலைக்கு வந்த முகமது ஷாத் (வயது 16) என்ற சிறுவனை தண்ணீர் இழுத்து சென்றது. அவனை அக்கம் பக்கத்தினர் மீட்க முயன்றனர். ஆனால் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் அவனை மீட்க முடியவில்லை. இதனால் அவனது கதி என்ன என்பது மர்மமாக உள்ளது. அவனை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    இதேபோல கிச்சிப்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் மனைவி புஷ்பா (வயது 55) என்பவர் நேற்றிரவு வீட்டில் இருந்து அருகில் உள்ள எருமா பாளையம் ஏரி பகுதிக்கு சென்றார். பின்னர் இன்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இன்று காலையில் உறவினர்கள் தேடிய போது அவர் ஏரியில் பிணமாக மிதந்தது தெரிய வந்தது.

    இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    வழக்கம் போல நேற்றிரவு புஷ்பா வீட்டில் இருந்து வெளியில் சென்றார். சற்று நேரத்தில் கன மழை பெய்ததால் ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது. அவர் ஆழம் தெரியால் ஏரிக்குள் இறங்கியதால் தவறி விழுந்தார். சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

    சேலத்தில் 40 முதல் 50 மி.மீட்டர் வரை வழக்கமாக மழை பெய்யும். ஆனால் நேற்றிரவு மழை தொடங்கியதில் இருந்தே சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. சேலம் மாநகரில் 3 மணி நேரத்தில் 138.8 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

    ஏற்காடு மலை பகுதியில் நேற்றிரவு கன மழை பெய்தது. இந்த மழையால் டேனீஷ்பேட்டை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதையொட்டி உள்ள வயல்காடுகளில் வெள்ளம் நிரம்பி காட்சி அளித்தது. இதே போல சேலம் மூக்கனேரிக்கும் நீர் வரத்து அதிகரித்தது.

    ஏற்காட்டில் பெய்த கன மழையால் மலையில் உள்ள 62 கிராமங்களிலும் நேற்றிரவு 9.15 மணி முதல் இன்று காலை வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

    சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    ஏற்காட்டில் 116 மி.மீ., காடையாம்பட்டி 32.2, ஓமலூர்30, கரியகோவில் 17, வாழப்பாடி 10, ஆனைமடுவு 10, மேட்டூர் 5.2, எடப்பாடி 4.4, சங்ககிரி 3.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 362.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×