search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாமீனில் வந்த ரவுடி பினு திடீர் தலைமறைவு
    X

    ஜாமீனில் வந்த ரவுடி பினு திடீர் தலைமறைவு

    கடந்த 23-ந்தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ரவுடி பினு தலைமறைவானதையடுத்து அவனை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    பூந்தமல்லி:

    சென்னை சூளைமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி பினு. இவன் மீது கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கத்தில் ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினான்.

    இதனை அறிந்த போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து 75 ரவுடிகளை ஒரே நேரத்தில் கைது செய்தனர். அப்போது ரவுடி பினு தப்பி ஓடிவிட்டான். அவன் அரிவாளால் கேக் வெட்டும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீசாரின் என்கவுண்டர் பீதியால் அவன் பிப்ரவரி 13-ந்தேதி அம்பத்தூர் போலீஸ் இணை கமி‌ஷனர் அலுவலகத்தில் போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தான். அப்போது போலீசாரிடம் பினு ‘‘நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை. என்னை மன்னித்து வாழவிடுங்கள் ’’ என்று கெஞ்சியபடி பேசும் வீடியோ வெளியாகி இருந்தது.

    விசாரணைக்கு பின்னர் பினுவை புழல் சிறையில் அடைத்தனர். அங்குள்ள மற்ற ரவுடிகளால் பினுவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் வேலூர் சிறைக்கு அவனை அதிகாரிகள் மாற்றி இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. 30 நாட்கள் மாங்காடு போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.



    ஆனால் ஜாமீனில் வந்த பினு அதன் பின்னர் மாங்காடு போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட வரவில்லை. அவன் தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

    இதுபற்றி போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். பினுவின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தலைமறைவான பினுவை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த முறை பினு விசாரணையின் போது கரூரில் ஒருவரது வீட்டில் தங்கி இருந்ததாக தெரிவித்து இருந்தான். இதையடுத்து கரூரில் விசாரிக்க தனிப்படை போலீசார் சென்று உள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது பினு விரைவில் கைது செய்யப்படுவான் என்று தெரிவித்தார்.
    Next Story
    ×