search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொந்தமாக தொழில் தொடங்க இளைஞர்கள் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் - நாராயணசாமி பேச்சு
    X

    சொந்தமாக தொழில் தொடங்க இளைஞர்கள் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் - நாராயணசாமி பேச்சு

    சொந்தமாக தொழில் தொடங்க இளைஞர்கள் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சியின் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா புதுவை சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

    விழாவுக்கு அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    வேலைவாய்ப்பை தருவதுதான் மாநில அரசுக்கு சவாலாக உள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்கள் பிற மாநிலங்களில் வேலை பெறலாம்.

    புதுவையில் 28 ஆயிரம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இது மட்டுமில்லாமல் கொல்லைப்புறமாக நியமனமும் நடந்தது. ஆனால், அவர்களுக்கு அரசால் சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, தனியார் நிறுவனத்தின் மூலம் இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தோம். இதன் மூலம் ஆண்டுக்கு 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது.

    சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகியபெரு நகரங்களில் புதுவையை சேர்ந்த இளைஞர்கள் பணி புரிகிறார்கள்.

    வேலை தேடும் நிலையில் இருந்து மாறி மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் நிலைகளுக்கு இளைஞர்கள் உருவாக வேண்டும். அதற்கு சொந்தமாக தொழில் தொடங்கும் திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    புதுவையில் தொழில் தொடங்க நல்ல வாய்ப்புகளும் உள்ளது. விரைவில் புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.ஐ.டி. பார்க்) அமைய உள்ளது. இதில், தொழில் செய்ய பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதுவை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    அதோடு வெளிநாட்டு நிறுவனங்களும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதில் பணிபுரிபவர்களுக்கு வருடத்துக்கு ரூ. 4 லட்சம் சம்பளமாக கிடைக்கும்.

    கடந்த ஆண்டு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களில் 2 ஆயிரத்து 600 பேருக்கு வேலை கிடைத்தது. இந்த ஆண்டு பயிற்சி பெற்றவர்களில் 62 சதவீதம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் மணிகண்டன், அதிகாரி யாசம் லட்சுமி நாராயண ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×