search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் சரிபட்டு வரமாட்டார்- அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    முதலமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் சரிபட்டு வரமாட்டார்- அமைச்சர் செல்லூர் ராஜூ

    முதல்-அமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் சரிபட்டு வரமாட்டார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    மதுரை:

    மதுரை தெற்கு தொகுதியில் காவிரி வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் தங்கம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மாபா.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாபா.பாண்டியராஜன் பேசியதாவது:-

    காவிரி நதிநீர் பிரச்சனை பல ஆண்டு காலம் இருந்து வருகிறது. ஆனால் இப்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதற்கு சட்ட போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திக்காட்டிய ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறோமோ அதே போல காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காவிரி நாயகன் என்று அழைக்க வேண்டும்.

    இன்றைக்கு ஜெயலலிதா விட்டுச் சென்ற மக்கள் நலத்திட்டங்களை முதல்- அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    தமிழகத்தில் அம்மா வழியில் நடந்து வரும் எடப்பாடி அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த ஆட்சி மீது குறைகளை கூறி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் எலி போல இருந்துவிட்டு வெளியே புலி போல் பேசுகிறார்.

    தி.மு.க. ஆட்சியில் தான் மக்கள் விரோத திட்டங்களான ஸ்டெர்லைட், கெயில் குழாய் திட்டம், நீட் தேர்வு ஆகியவை கொண்டுவரப்பட்டன.


    ஆனால் மக்களை ஏமாற்ற தி.மு.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும், பாதிப்பும் இல்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் நடந்த அக்கிரமங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

    எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவிக்கு சரிபட்டு வர மாட்டார்.

    இன்னும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. மக்கள் பணியாற்றும். இதில் ஒரு சந்தேகமும் இல்லை. எனவே பொதுமக்களாகிய நீங்கள் ஆட்சிக்கும், கட்சிக்கும் துணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் புதூர் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, நிர்வாகிகள் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, அன்புச்செழியன், செந்தில்குமார், சோலை ராஜா, ஜெயரீகன், நல்லுசாமி, விக்ரம் நல்லுசாமி, பாஸ்கரன், வட்டச் செயலாளர்கள் கேபிள் பார்த்தசாரதி, தேவதாஸ், ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் நூர் முகமது, பார்த்திபன், ராஜீவ்காந்தி, தாஸ், கலாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #SellurRaju
    Next Story
    ×