search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி 2-வது நாளாக நீடிப்பு
    X

    ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி 2-வது நாளாக நீடிப்பு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழு முன்னிலையில் இன்று 2-வது நாளாக நடந்தது.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த மாதம் (மே) 22-ந்தேதி பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டது.

    முதலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

    இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து அங்கு ஆய்வு நடத்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். அதன் பேரில் உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் (17-ந்தேதி) ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குழு கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை டேங்கர் லாரிகள் மூலம் வெளியே கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி கந்தக அமிலத்தை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றும் பணி நேற்று காலை தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையின் பிரதான வாயில் சீல் வைக்கப்பட்டிருப்பதால், ஆலையின் இடது புறம் உள்ள வாசல் வழியாக உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் உள்ளே சென்றனர்.

    அந்த வாசல் வழியாகவே கந்தக அமிலத்தை எடுத்து வருவதற்காக டேங்கர் லாரிகள் கொண்டு செல்லப்பட்டன. ஆலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் ஜெனரேட்டர் மூலம் மின்வசதி செய்யப்பட்டது. பின்பு மோட்டார் மூலம் பம்பிங் செய்து டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையில் மொத்தம் ஆயிரம் மெட்ரிக் டன் கந்தக அமிலம் உள்ளது. அமிலத்தை அகற்றும் பணி மிகவும் பாதுகாப்பான முறையில் நடத்தப்படுகிறது. அவற்றை அகற்றும் பணி இரவிலும் நீடித்தது. இன்று காலை வரை விடிய விடிய நடந்தது.

    கந்தக அமிலம் அகற்றும் பணி குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும் போது, ‘ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி அரசு அதிகாரிகள் தலைமையில் நடந்து வருகிறது. அமிலத்தை வெளியேற்ற 5 டேங்கர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன. கந்தக அமிலம் ஏற்றிய பிறகு டேங்கர் லாரிகளை வெளியே கொண்டு செல்லும் பணி நடக்கும்.

    ஆலையில் சுமார் ஆயிரம் மெட்ரிக் டன் கந்தக அமிலம் உள்ளது. அவை ஓரிரு நாளில் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படும். ஸ்டெர்லைட் ஆலை இந்த கந்தக அமிலத்தை ஏற்கனவே வெளியே உள்ள ஒரு சில நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தது. அந்த நிறுவனங்களுக்கே அமிலத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழு முன்னிலையில் இன்று 2-வது நாளாக நடந்தது.

    கந்தக அமிலத்தை கொண்டு வருவதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நேற்று சென்ற 5 டேங்கர் லாரிகள் இன்று காலை வெகுநேரம் வரை வெளியே வரவில்லை. அவற்றில் கந்தக அமிலம் நிரப்பப்பட்ட 4 லாரிகள் இன்று காலை 8.45 மணியளவில் ஆலையை விட்டு வெளியே வந்தது.

    ஸ்டெர்லைட் ஆலையில் எடை பார்க்கும் வசதி அங்கு இருந்தபோதிலும் அங்கு மின்சாரம் துண்டிக் கப்பட்டிருப்பதால் அந்த எந்திரத்தை இயக்க முடியவில்லை. இதனால் எவ்வளவு எடை ஆசிட் நிரப்பப்பட்டுள்ளது என்பதை எடை போடுவதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே உள்ள கனரக வாகனங்கள் எடைபோடும் நிறுவனத்திற்கு லாரிகள் கொண்டு செல்லப்பட்டன.

    அங்கு எடை பார்க்கப்பட்டதில் 4 லாரிகளிலும் 10 டன் அளவுக்கே ஆசிட் நிரப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அவற்றில் 21 டன் வரை ஆசிட் நிரப்பலாம். இதையடுத்து அந்த 4 லாரிகளும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலைக்குள் கொண்டு செல்லப்பட்டன.

    அவற்றில் 21 டன் அளவுக்கு ஆசிட் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து லாரிகளிலும் 21 டன் ஆசிட் நிரப்பிய பிறகு அவற்றை வெளியே கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×