search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு
    X

    மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

    மணிமுத்தாறு அருவியில் அவ்வப்போது வெள்ளம் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பது ஆபத்து என்பதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அம்பை:

    தென் மேற்கு பருவமழை தொடங்கியதையொட்டி நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. மேலும் மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த நிலையில் மணிமுத்தாறு அருவியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று 9-வது நாளாக நீடித்தது. வெளியூர்களில் இருந்து மணிமுத்தாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், “மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. மணிமுத்தாறு அருவியில் அவ்வப்போது வெள்ளம் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. அதில் சுற்றுலா பயணிகள் குளிப்பது ஆபத்து என்பதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றனர். 
    Next Story
    ×