search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது- மீன் விலை குறைய வாய்ப்பு
    X

    மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது- மீன் விலை குறைய வாய்ப்பு

    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
    ராயபுரம்:

    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்கியது. இது நாளையுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்கிறார்கள். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் செல்வதால் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தடைகாலத்தில் ஏற்கனவே பழுதான படகுகள், வலைகளை சீரமைத்திருந்தனர். தற்போது கடலுக்கு செல்ல தேவையான ஐஸ்கட்டிகள், டீசல், உணவு பொருட்களை ஏற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் மீனவர்கள் உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.

    தடைகாலம் நிறைவடைந்து மீன் பிடிக்க செல்வதால் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

    கடந்த 2 மாதமாக மீன் விலை உச்சத்தில் இருந்தது. வஞ்சிரம், வவ்வால் மீன்கள் கிலோ ரூ. 900 வரை விற்கப்பட்டது. தற்போது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    வழக்கமாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகே கரை திரும்புவார்கள். ஆனால் சிறிய வகை படகுகளில் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீன் விலை விரைவில் குறையும் என்று மீன் பிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். #Tamilnews
    Next Story
    ×