search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை - குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
    X

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை - குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

    குற்றால மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்வதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    தென்காசி:

    குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலமாகும். குற்றா லத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியது. சீசன் தொடங்கிய 4 நாட்கள் கழித்து, சாரல் மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைவாகவே இருந்தது.

    இதற்கிடையே குற்றாலத்தில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இடையிடையே இதமான வெயிலும் அடிக்கிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கினாலும் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். மெயின் அருவியை போன்று பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.

    ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று ஐந்தருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    அருவியில் விழும் தண்ணீரின் அழகை ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் ஐந்தருவிக்கு வந்து சென்றனர். மாலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் இரவில் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று மாலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று மாலை முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்வதால் தொடர்ந்து இன்று காலை வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்ந்தது. இன்று காலையும் குற்றால மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதாலும், சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசுவதால் இன்னும் ஒருசில நாட்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்டும் என்று அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இன்று (சனிக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.


    Next Story
    ×