search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை- சுப்ரீம்கோர்ட்டில் தமிழகத்தின் உரிமையை காக்க வேண்டும்: வைகோ
    X

    முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை- சுப்ரீம்கோர்ட்டில் தமிழகத்தின் உரிமையை காக்க வேண்டும்: வைகோ

    முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் உரிமையை அரசு காக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #MDMK #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2006ம் ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதியன்று நீதிபதிகள் சபர்வால், தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூவர் அமர்வு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உடனடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும், பின்னர் காலப்போக்கில் 152 அடி வரை உயர்த்தலாம் என்றும் தீர்ப்பளித்தது.

    ஆனால் கேரள அரசு மிகவும் தந்திரமாக கேரள மாநிலத்துக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பரப்புக்கு அருகில் ‘பஸ் ஸ்டேசன்’ என்ற ஒரு வளாகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அது பசுமைத் தீர்ப்பாயத்தால் தடுக்கப்பட்ட பின் பிரச்சனையை உச்சநீதிமன்றத்துக்கு கேரள அரசு கொண்டு சென்றது.

    ‘பஸ் ஸ்டேசன்’ என்று சொல்லும் இந்த வளாகத்தில் மூன்று நட்சத்திர ஹோட்டல்களையும், கேளிக்கை விடுதிகளையும், வணிக வளாகங்களையும் கட்ட முடிவு செய்து, 120 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்துள்ளது. இதன் முக்கிய நோக்கம், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்பதுதான்.

    கேரள அரசின் பின்னணியில் அம்மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஸல் ஜாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தின் மூன்று கோடி மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.

    இதைத் தடுப்பதற்கான ஒரு அவசரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். கேரளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோஜ் ஜார்ஜ் உச்சநீதிமன்றத்தில் வாதாடுகையில், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிக் குயிக் இந்த அணை ஐம்பது ஆண்டுகளுக்குத்தான் வலுவாக இருக்கும் என்று கூறி உள்ளதகாவும், எனவே அணை எந்த நேரத்திலும் உடையலாம் என்றும், பொய் தகவலை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.

    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இந்த வாதங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு, பேரழிவு தடுக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் தனது ஆணையில் நீண்ட உபதேசம் செய்திருக்கிறார்.

    தமிழகத்துக்கு குறிப்பாக முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மேற்கொள்ளவிடாமல் பிரச்சனையை அரசியல் சட்ட அமர்வுக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு முற்பட வேண்டும்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #MDMK #Vaiko
    Next Story
    ×