search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் வாட்டிய வெயிலுக்கு துப்பட்டாவால் முகத்தை மூடிசென்ற பெண்கள்.
    X
    வேலூரில் வாட்டிய வெயிலுக்கு துப்பட்டாவால் முகத்தை மூடிசென்ற பெண்கள்.

    வேலூரில் அக்னி வெயில் தாக்கம் குறைவு

    கடந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் 110 டிகிரியை கடந்து மக்களை சுட்டெரித்தது. இந்தாண்டு மழை குறுக்கிட்டு அக்னி வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
    வேலூர்:

    கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வேலூர் மாவட்டத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. மார்ச், ஏப்ரலில் 106 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. திருத்தணியில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயில் பயத்தால் மதிய நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர தயங்கினர்.

    வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டனர். பகல், இரவு நேரங்களில் அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்விசிறிகளும் அனல் காற்றை கக்கியது. வீடுகளில் தூங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் கோடையின் உக்கிரமான அக்னி வெயில் இம்மாதம் 4-ந் தேதி தொடங்கியது. வெயில் தாண்டவமாட போகிறது என்று வேலூர் மக்கள் அஞ்சினர். ஆனால் மாறாக அக்னி தொடங்கும் முந்தைய நாள் மாலை மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

    அக்னி தொடங்கிய 4-ந் தேதி 95.7 டிகிரி வெயிலும், 5-ந் தேதி 99.7 டிகிரியும் வெயில் அடித்தது. பிறகு வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் மாறி மாறி 100 டிகிரி, 99 டிகிரி என வாட்டியது. 14-ந் தேதி 103 டிகிரிக்கு அக்னி வெயில் கொளுத்தியது.

    பிறகு நடுநடுவே மழை பெய்தது. மாவட்டம் முழு வதும் ஈரப்பதத்துடன் மாலை நேரங்களில் குளிர் காற்றும் வீசியது. கடந்த 19-ந் தேதி திடீரென 104.5 டிகிரிக்கு வெயில் உச்சத்தை எட்டி வாட்டியது. பிறகு, 24-ந் தேதி 98.2 டிகிரி, 25-ந் தேதி 97.9 டிகிரி வெப்பநிலைக்கு குறைந்தது.

    இப்படிப்பட்ட நிலையை உருவாக்கிய அக்னி வெயில் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று 102.6 டிகிரி வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திர காலங்களில் இடைப்பட்ட மழையால், வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கடந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் 110 டிகிரியை கடந்து மக்களை சுட்டெரித்தது. இந்தாண்டு மழை குறுக்கிட்டு அக்னி வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றியது. இதனால் அக்னியில் இருந்து தப்பித்தோம் என பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அக்னி நிறைவு பெற்ற பிறகு, இன்று வெப்பநிலை அதிகரித்துள்ளது. காலையில் இருந்தே வெயில் உக்ரம் அதிகளவில் உள்ளது. மதியம் 12 மணி அளவில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதனால் வேலூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    Next Story
    ×