search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் கடன் தொல்லையால் மனைவியுடன் தொழிலதிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    திருச்சியில் கடன் தொல்லையால் மனைவியுடன் தொழிலதிபர் தூக்குபோட்டு தற்கொலை

    கடன் தொல்லையால் மனைவியுடன் தொழிலதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் எல். ஐ.சி. காலனி அருகே உள்ள சோமநாயக்கன்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 62). இவரது மனைவி லீலா (55). இவர்களுக்கு ராஜேஷ் (21) என்ற மகன் உள்ளார்.

    வெங்கடேசன் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது மகன் ராஜேஷ் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் தங்கி ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார்.

    வெங்கடேசன் பிரபல வங்கியில் வீடு கட்டி விற்கும் தொழிலுக்காக ரூ.1½ கோடி வரை கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் முடங்கி மந்தமாக உள்ளதால் வங்கிக்கு பணம் செலுத்த முடியவில்லை.

    கடந்த ஒரு வருடமாக வெங்கடேசன் பண கஷ்டத்தில் இருந்து உள்ளார். பணத்தை திருப்பி செலுத்தாததால் வங்கியில் இருந்து அவருக்கு அதிக நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வெங்கடேசன் மனைவி லீலாவிடம் கடன் தொல்லையை கூறி வருத்தப்பட்டுள்ளார். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்துள்ளனர்.

    மகன் ராஜேஷ் சென்னையில் இருந்ததால் அவரை திருச்சிக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். திங்கட்கிழமை பழனி கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று கூறி வரவழைத்துள்ளனர்.

    உடனே ராஜேஷ் ரெயில் மூலம் நேற்று மாலை புறப்பட்டு திருச்சி வந்து கொண்டிருந்தார். இரவு 9 மணிக்கு தந்தையுடன் செல்போனில் ராஜேஷ் பேசினார். அப்போது ராஜேஷை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வரும்படி வெங்கடேஷ் கூறியுள்ளார்.

    இதனால் ரெயிலை விட்டு இறங்கியதும் ராஜேஷ் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது திருச்சியில் இறங்கி விட்ட தகவலை தந்தையிடம் தெரிவிக்க அவரை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் குழப்பத்துடன் வீட்டிற்கு சென்றார். அப்போது கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அதிர்ச்சியடைந்தார். ஜன்னல் வழியே பார்த்த போது வீட்டு அறையில் தந்தை வெங்கடேசனும், தாய் லீலாவும் தூக்கில் பிணமாக தொங்கினர்.

    ராஜேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இது குறித்து கே.கே.நகர் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    வெங்கடேசன், லீலா உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    தற்கொலை முடிவை எடுக்கும் முன்பு முதலில் வெங்கடேசன், லீலா தம்பதியினர் மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளனர். எனவே தான் அவரை பழனி கோவிலுக்கு போக வேண்டும் என ஏமாற்றி உடனே வரவழைத்துள்ளனர்.

    ஆனால் அதன் பிறகு ஒரே மகனான ராஜேஷின் வாழ்க்கையை தாங்களே அழிக்க நினைக்க கூடாது என நினைத்து அவர் வருவதற்குள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் பிரச்சினை குறித்து தனது தந்தை தன்னிடம் கூறாமல் விபரீத முடிவை எடுத்து விட்டார் என கூறி ராஜேஷ் கதறி அழுதது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இதற்கிடைய கடன் பிரச்சினை தொடர்பாக தொழிலதிபர் வெங்கடேசனை நேரில் யாரும் மிரட்டினார்களா? என அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா மூலமும் செல்போனில் பேசி மிரட்டிய வங்கி ஊழியர்கள் யார் என போனில் உள்ள அழைப்புகள் மூலமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×