search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.
    X
    ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

    மேட்டூர் அணை நீர்மட்டம் உயருகிறது

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று 32.94 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து 33.31 அடியானது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

    இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த 23-ந் தேதி 1,700 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3,500 கன அடியாக அதிகரித்தது. பின்னர் மாலையில் இந்த நீர்வரத்து 4,200 கன அடியானது. இன்று காலை 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர் வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    தற்போது கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர். ஒகேனக்கல் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் எண்ணை மசாஜ் செய்து மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்கு பாலம் உள்பட என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    மேட்டூர் அணைக்கு கடந்த 23-ந் தேதி 603 கன அடி தண்ணீர் வந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகரித்துள்ள தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் நேற்று மேட்டூர் அணைக்கு 1,299 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 2,491 கன அடியாக அதிகரித்தது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது.

    நேற்று முன்தினம் 32.8 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 32.94 அடியாக உயர்ந்தது. இன்று நீர்மட்டம் மேலும் உயர்ந்து 33.31 அடியானது. இன்னும் 2 நாட்களில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.


    Next Story
    ×