search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு தோல்வி பயத்தில் கடலூர் மாணவர் தற்கொலை - பெற்றோர் கதறல்
    X

    நீட் தேர்வு தோல்வி பயத்தில் கடலூர் மாணவர் தற்கொலை - பெற்றோர் கதறல்

    கடலூரில் நீட் தேர்வு எழுதியிருந்த மாணவர் ஒருவர், இணையதளத்தில் வெளியான மாதிரி வினாத்தாளில் விடை வேறு மாதிரி இருந்ததால், தோல்வி பயத்தில் தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #NEET
    கடலூர்:

    கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப்-டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வசந்தி. இவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களது மகன் அருண்பிரசாத் (வயது 19). இவர் கடந்த 2016-17-ம் கல்வி ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்தார். அப்போது அவர் 1150 மதிப்பெண் பெற்றிருந்தார்.

    மருத்துவப் படிப்பு படிக்க மாணவர் அருண்பிரசாத் ஆசைப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு எழுதினார். அதில் குறைவான மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து நீட் தேர்வில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைத்த அருண்பிரசாத் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார்.

    கடந்த 6-ந் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை அருண் பிரசாத் எழுதினார். இந்த நிலையில் நேற்று முதன்தினம் இணையதளத்தில் நீட் தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டது. இதனை அருண்பிரசாத் பார்த்தார்.

    அதில் தான் எழுதிய விடைகளுக்கும், மாதிரி விடைத்தாளில் இருந்த விடைகளுக்கும் அதிக அளவில் வித்தியாசம் இருந்தது. எனவே இந்த முறையும் தேர்ச்சி பெற முடியாமல் தோல்வி அடைந்து விடுவோம் என பயந்தார்.

    இது குறித்து தனது தாத்தாவிடம், இனிநான் டாக்டராக முடியாது என கூறி கண்ணீர் வடித்தார். தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று காலையில் அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர்.

    அருண்பிரசாத் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்தார். நீட் தேர்வில் எப்படியும் தோல்வி அடைந்து விடுவோம் என நினைத்த அவர் வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாலை 3 மணிக்கு அருண்பிரசாத்தின் தாய் வசந்தி வீட்டுக்கு வந்தார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த அருண்பிரசாத்தின் தந்தை பாபுவும் உடனடியாக வீட்டுக்கு வந்தார்.

    பாபு-வசந்தி தம்பதிக்கு அருண்பிரசாத் ஒரே மகன் ஆவார். அவரை அதிக பாசத்துடன் வளர்த்து வந்தனர். மகன் இறந்தது குறித்து பெற்றோர் கண்ணீர் மல்க கூறியதாவது:-


    அருண்பிரசாத் சிறு வயது முதல் நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருந்து வந்தான். மேலும் 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 493 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தான்.

    அதேபோல் பிளஸ்-2 விலும் நன்றாக படித்தான். அவன் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வான் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்து வந்தோம். இதற்காக தனிக்கவனம் செலுத்தி அவனை ஊக்குவித்து வந்தோம். இதனால் நண்பர்களுடன் கூடு விளையாட செல்லாமல் படித்து வந்தான். எங்களது ஒரே மகனை டாக்டராக பார்க்க ஆசைப்பட்டோம். ஆனால் இப்போது அவனை இழந்து விட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அருண்பிரசாத் தற்கொலை குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அருண்பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று காலையில்பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் அருண்பிரசாத் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உண்ணாமலைசெட்டி சாவடி பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. #NEET
    Next Story
    ×