search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் எனது நண்பர்கள் இல்லை- சரத்குமார்
    X

    ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் எனது நண்பர்கள் இல்லை- சரத்குமார்

    கமல்ஹாசன் மற்றும் ரஜினி காந்த் எனது நண்பர்கள் என்று தான் சொன்னதில்லை என்று நெல்லையில் சரத்குமார் தெரிவித்தார். #Sarathkumar #KamalHaasan #Rajinikanth
    நெல்லை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு சிறிதும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் வாரியம் என்று கூறாமல் ஆணையம் என்று தாக்கல் செய்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு என்ன தண்டனை என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெளிவுப்படுத்த வேண்டும்.

    கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி மெஜாரிட்டியை பெற்று உள்ளது. ஆனால் அதை ஆட்சி அமைக்க அழைக்காமல் பாரதிய ஜனதாவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தது கண்டனத்திற்கு உரியதாகும். கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவாக்குவதற்கு பாரதிய ஜனதாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்து உள்ளார். பெரும்பான்மை இல்லாத எடியூரப்பா ஆட்சி அமைத்தது குதிரைபேரத்திற்கு வழிவகுக்கும்.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது தமிழகத்திலும் தொங்கு சட்டசபை உருவாகலாம். அப்படி தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்படாமல் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மக்களை சந்தித்து வருகிறது.

    சமத்துவத்தை விரும்புகின்ற படித்த, அறிவுள்ள, தன்னம்பிக்கை, நேர்மை, திறமையுள்ள சரத்குமாரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். வருகிற சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வெற்றி பெற்று நான் முதல்-அமைச்சர் ஆவேன்.

    எனக்கு வாழ்வு கொடுத்தவர் விஜயகாந்த். அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. இறைவன் விரும்பினால் அவருடன் கூட்டணி அமைத்து இணைந்து செயல்படுவேன், இணைந்து ஆட்சி அமைப்போம். இதுகுறித்து தேர்தல் நேரத்தில் ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் பேசி கூட்டணி முடிவு எடுக்கப்படும். கமல், ரஜினி எனது நண்பர்கள் என்று நான் சொன்னதில்லை.

    அவர்கள் என்னுடன் திரைத்துறையில் ஒன்றாக பயணிப்பவர்கள். நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து மக்களை சந்திப்பது வரவேற்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. எனவே அதுபற்றி கருத்து கூறவிரும்பவில்லை.

    மக்களை பாதிக்கக்கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். நான் தென்காசி தொகுதிக்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். விடுபட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காக மீண்டும் தென்காசி தொகுதியில் போட்டியிட உள்ளேன். அந்த தொகுதி மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். விரைவில் தென்காசியில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநாடு நடத்தப்படும்.

    இவ்வாறு சரத்குமார் கூறினார். #Sarathkumar #KamalHaasan #Rajinikanth
    Next Story
    ×