search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசனுடன் பேச மேடையில் முண்டியடித்து ஏறிய வாலிபர்கள்.
    X
    கமல்ஹாசனுடன் பேச மேடையில் முண்டியடித்து ஏறிய வாலிபர்கள்.

    பொதுக்கூட்டத்தில் மேடையில் ஏற முயன்ற வாலிபர்களால் பேச்சை பாதியில் நிறுத்திய கமல்ஹாசன்

    நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேடையில் ஏற முயன்ற வாலிபர்களால் கமல்ஹாசன் பேச்சை பாதியில் நிறுத்தியதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குமரி மாவட்டத்தில் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

    கிராமம் கிராமமாக சென்று மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்ட கமல்ஹாசன், நேற்று மாலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதில், கமல்ஹாசன் ரசிகர்கள், மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். கமல்ஹாசனை அருகில் சென்று பார்க்க மேடையின் அருகே கூட்டம் முண்டியடித்தது.

    கமல்ஹாசன் மேடைக்கு வந்ததும், பொதுக்கூட்டம் தொடங்கியது. அவர், பேச ஆரம்பித்ததும், மேடையின் முன்பு திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்து கோ‌ஷமிட்டது. அவர்களை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அமைதிப்படுத்த முயன்றனர்.

    கமல்ஹாசனை பேச விடுங்கள், அமைதியாக இருங்கள் என்று நிர்வாகிகள் குரல் கொடுத்தப்படி இருந்தனர். ஆனால் மேடையின் முன்பு நின்றிருந்த 2 வாலிபர்கள் கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளை கேட்க மறுத்து மேடையில் ஏற முயன்றனர்.

    வாலிபர்களின் செயல் கமல்ஹாசனின் பேச்சுக்கு இடையூறாக இருந்தது. அவரும் வாலிபர்களை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் இருவரும் அதை கேட்க மறுத்து ‘மவுனத்தை கலையுங்கள் தலைவா’ என்று கத்தினர்.

    இதற்கு கமல்ஹாசன், ‘நான்தான் மவுனத்தை கலைத்து விட்டேனே. இப்போது என் கருத்தை சொல்லத்தான் இங்கு வந்துள்ளேன். என்னை பேச விடுங்கள். நான் பேசிய பின்பு மைக்கை உங்களிடம் தருகிறேன். அப்போது உங்கள் கருத்தை கூறுங்கள். அதை நான் கேட்கிறேன்,’ என்றார். ஆனால் வாலிபர்கள் அதை கேட்க மறுத்து மீண்டும் மேடையில் ஏறினர். இதனால் கமல்ஹாசன் பேச்சை பாதியில் நிறுத்தினார்.

    கமல்ஹாசன் பேச்சை பாதியில் முடித்துக் கொண்டது கூடி நின்ற பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் கமல்ஹாசனை நோக்கி பேசுங்கள், பேசுங்கள் என்று கூச்சலிட்டனர்.

    ஆனால் கமல்ஹாசன் அதை கேட்காமல் மேடையில் இருந்து திரும்பிச் சென்றார். இது மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    கமல்ஹாசன் பேச்சை பாதியிலேயே நிறுத்த வைத்த வாலிபர்கள் யார்? எதற்காக கூட்டத்தில் குழப்பம் விளைவித்தனர் என்பது பற்றி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாற்று கட்சியினரின் சதியா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட வேலையா? என்றும் அவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே அந்த வாலிபர்களை கண்டு பிடிக்க அவர்கள், முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    கமல்ஹாசன் பொதுக்கூட்டம் நடைபெற்ற வடசேரி பகுதி போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகும். பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றதால் அந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவில் பகுதியில் ஏற்கனவே மேம்பால பணிகள் நடந்து வருவதால் அனைத்து சாலைகளிலும் வாகன நெருக்கடி இருந்து வந்தது. இந்த நிலையில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் மற்றும் பொதுக்கூட்டத்தால் மேலும் நெருக்கடி ஏற்பட்டது.
    Next Story
    ×