search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போளூர் மூதாட்டி கொலையில் மேலும் 6 பேர் கைது
    X

    போளூர் மூதாட்டி கொலையில் மேலும் 6 பேர் கைது

    போளூர் அருகே குழந்தை கடத்துபவர் என கருதி மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    போளூர்:

    போளூர் அருகே குல தெய்வம் கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்துபவர்கள் எனக் கருதி கிராம மக்கள் தாக்கியதில் ருக்மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக 62 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் 36 பேரை போளூர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அத்திமூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), பாபு (54), ரமேஷ் (36), ஏழுமலை (29), தின்டிவனத்தை சேர்ந்த சேகர் (43), தானியார் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (34). ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் ஊரை விட்டு தலைமறைவாகி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் பகுந்தனர். களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, தின்டிவனம் உள்ளிட்ட 10 கிராமங்களில் பலர் வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டனர். இதனால் அந்த கிராமங்கள் 7-வது நாளாக இன்றும் வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் தலைமறைவாக உள்ள 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த கஜேந்திரன் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்ததால் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து சுயநினைவு திரும்பாத நிலையில் இருந்து வந்தார். கார் மெக்கானிக் தொழில் செய்து வந்த அவருக்கு 2 மகள் உள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு சமாளிக்க முடியாமல் கண்ணீர் விட்டனர்.

    கஜேந்திரன் மனைவி பத்மாவதி நேற்று முன்தினம் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியை சந்தித்து மருத்துவ உதவி கேட்டு மனு கொடுத்தார்.

    இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க சென்னையிலுள்ள மருத்துவ மனை உதவிக்கரம் நீட்டியுள்ளது. எனவே அவர் நேற்று மாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    Next Story
    ×