search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலை தளத்தில் பரவும் பீதி - காஞ்சீபுரம், திருவள்ளூரில் குழந்தை கடத்தல் கும்பலா?
    X

    சமூக வலை தளத்தில் பரவும் பீதி - காஞ்சீபுரம், திருவள்ளூரில் குழந்தை கடத்தல் கும்பலா?

    குழந்தைகளை கடத்தி நரபலி கொடுக்கும் கும்பல் காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதிகளில் ஊடுருவியுள்ளதாக அப்பகுதிகளில் பீதி ஏற்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் இருந்து குழந்தைகளை கடத்தி சென்று ஆந்திராவில் நரபலி கொடுப்பதற்காக கும்பல் ஒன்று காஞ்சீபுரம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பதுங்கி இருப்பதாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரவி வருகிறது.

    இது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரத்தை அடுத்த சின்னையன் சத்திரம் பகுதியில் நேற்று இரவு ஒரு வீட்டின் பின்புறம் வடமாநில ஒருவர் நின்றார்.

    அவர் குழந்தையை கடத்த பதுங்கி இருப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வடமாநில வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரை போலீசார் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் காஞ்சீபுரத்தை அடுத்த தாயார் அம்மன் குளம் அருகே நடந்த திருவிழாவில் 2 வடமாநில வாலிபர்களை பொது மக்கள் குழந்தை திருட வந்ததாக நினைத்து சுற்றிவளைத்து தாக்கினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர்.

    இதில் ஒருவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். மற்றொருவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் அவன் அஸ்வித் புஜிர் என்பதும் அவர் கீழம்பி பகுதியில் அரிசி ஆலையில் வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.

    இதேபோல் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த வட மாநிலத்தவர் தோற்றத்தில் இருந்த ஒருவரையும் தாக்கினர். அவர் காஞ்சீபுரம் ஆலடி தெருவை சேர்ந்த தீபக் என்பது தெரிந்தது.

    சமூக வளைதளத்தில் பரவும் வடமாநில வாலிபர்கள் குறித்த தகவலால் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாலிபர்கள் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்திலும இதேபோல் குழந்தை கடத்தில் பீதி ஏற்பட்டுள்ளது.

    திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமம் வழியாக நேற்று இரவு 45 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் சென்றார். அவரை குழந்தை கடத்த வந்தவர் என்று நினைத்து அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பற்றிய விவரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    பொன்னேரி அருகே உள்ள ஆலாடு பூந்தோட்ட காலனியில் நேற்று இரவு கையில் சாக்குப் பையுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்து தாக்கினர். அவரிடம் விசாரித்த போது மொத்தம் 5 பேர் அங்கு வந்ததாக தெரிவித்தார்.

    இதனையடுத்து குழந்தைகளை கடத்தி நரபலி கொடுக்கும் கும்பல் தங்கள் கிராமத்தில் ஊடுருவியதாக அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. பொன்னேரி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் ஊருக்குள் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    ஆனால் யாரும் சிக்கவில்லை. இதற்கிடையே பிடிபட்ட பெண்ணை பொன்னேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த நவநீதம் என்பது தெரியவந்தது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    குழந்தை கடத்தல் கும்பல் பீதியால் லட்சுமிபுரம், ஆலாடு, மத்ராவேடு, தேவனாஞ்சேரி கிராம மக்கள் வீட்டிற்கு ஒருவர் இரு சக்கரவாகனம் மூலம் இரவு நேரங்களில் கையில் தடியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதனால் பொன்னேரி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. போலீசாரும் வடமாநில கும்பல் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த  ஒரு மாதத்தில் இளம்பெண்கள், மாணவிகள் அதிக அளவில் மாயமாகி இருப்பது குறிப்பித்தக்கது.

    Next Story
    ×