search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் முன்னாள் எம்.பி. கண்ணன் மீண்டும் தனிக்கட்சி தொடங்குகிறார்
    X

    புதுவையில் முன்னாள் எம்.பி. கண்ணன் மீண்டும் தனிக்கட்சி தொடங்குகிறார்

    புதிய கட்சி தொடங்கி அந்த கட்சி சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்.பி. கண்ணன் திட்டமிட்டு இருக்கிறார். #kannan #puducherry
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரசில் முன்னணி தலைவராக திகழ்ந்தவர் கண்ணன். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் காங்கிரசில் இருந்து விலகினார்.

    பின்னர் அ.தி.மு.க.வில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன்பிறகு அ.தி.மு.க.வில் இருந்து விலகினார்.

    அதன்பின்னர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் கலந்து கொள்ளாமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் அவர் புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன. நேற்று அவரது ஆதரவாளர்கள் கண்ணனை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது தனிக்கட்சி தொடங்குவது என்று முடிவெடுத்துள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கண்ணன் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறார். புதிய கட்சி தொடங்கி அந்த கட்சி சார்பில் அவர் போட்டியிடுவார்.

    1996-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து மூப்பனார் பிரிந்து த.மா.கா. தொடங்கியபோது புதுவையில் கண்ணன் த.மா.கா.வில் சேர்ந்தார். அப்போது புதுவையில் த.மா.கா. 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    அந்த தேர்தலில் தமிழகத்தை போல புதுவையிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கண்ணன் அமைச்சரானார். இதன்பிறகு புதுவை மக்கள் காங்கிரஸ், புதுவை முன்னேற்ற காங்கிரஸ் என 2 தடவை கட்சிகள் தொடங்கினார். 2 தடவையும் கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் இணைந்தார்.

    கடைசியாக காங்கிரசில் எம்.பி.யாக இருந்தார். அதில் இருந்து விலகிதான் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இப்போது மீண்டும் காங்கிரசில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் புதுக்கட்சி தொடங்குவது என்று அவர் முடிவெடுத்திருக்கிறார். #kannan #puducherry

    Next Story
    ×