search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளில் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் தண்ணீர் வரி
    X

    சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளில் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் தண்ணீர் வரி

    சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளில் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் தண்ணீர் வரி செலுத்துமாறு குடிநீர் வாரியம் நோட்டீசு அனுப்பியுள்ளது.

    சென்னை:

    சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வாரியம் தண்ணீர் வரி வசூலித்து வருகிறது.

    இதில் மாநகராட்சியுடன் இணைந்த அம்பத்தூர், மாதவரம், பாடிகுப்பம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தங்கள் வீடுகளுக்குள் குடிநீர் இணைப்பு பெறாவிட்டாலும் தண்ணீர் வரி செலுத்துமாறு குடிநீர் வாரியம் நோட்டீசு அனுப்பி வருகிறது.

    ஒவ்வொருவர் செலுத்தும் வீட்டு வரிக்கு ஏற்ப 10 சதவீத குடிநீர் வரி விதிக்கப்படுகிறது.

    குறைந்த பட்சம் 6 மாதத்துக்கு ரூ.400 செலுத்துமாறு வீடுகளுக்கு நோட்டீசு வருகிறது. குடிநீரை கண்ணில் காட்டாத நிலையில் மக்களிடம் குடிநீர் வரி கேட்பது ஆச்சரியமாக உள்ளதாக குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர்.

    அம்பத்தூரில் ராஜிவ் நகர், பானுநகர், கள்ளிக்குப்பம், பாடிகுப்பம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல வருடங்களாக வீடுகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதையே குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு சில பகுதிகளுக்கு மட்டும்தான் லாரிகளில் குடிநீர் வரும். மற்ற பகுதி மக்கள் லாரி தண்ணீரை எதிர்பார்ப்பதில்லை.

    வீடுகளில் உள்ள ‘போர் தண்ணீரையே’ அனைத்துக்கும் பயன்படுத்தி கொள்கின்றனர். இங்கு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்காக தெருக்களில் குழாய் பதிக்கப்பட்ட நிலையில் சில வீடுகளில் குடிநீர் வாரியம் மூலம் இணைப்பு பெற்றுள்ளனர். சில வீடுகளில் இன்னும் இணைப்பு பெறாமல் உள்ளனர். இந்த வீடுகளில் ஆழ்குழாய் தண்ணீரை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனாலும் இந்த வீடுகளுக்கும் பாதாள சாக்கடை குடிநீர் வரி செலுத்த வேண்டும். என்று குடிநீர் வாரியம் நோட்டீசு அனுப்புவது எந்த விதத்தில் நியாயம் என்று குடியிருப்பு வாசிகள் புலம்புகின்றனர்.சென்னை மாநகராட்சியுடன் இணைந்த நகராட்சி பகுதிகளில் பல இடங்களில் இந்த நிலை தான் உள்ளது.

    இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியுடன் இணைந்த நகராட்சி பகுதியில் வீட்டு வரியுடன் சேர்த்து குடிநீர்-கழிவுநீர் கட்டணத்தையும் வரியாக செலுத்தி வந்தனர். இப்போது அதை 2 ஆக பிரித்து வீட்டு வரி, குடிநீர் வரி என வசூலிக்கப்படுகிறது.

    வீடுகளில் குடிநீர் கழிவுநீர் இணைப்பு பெறாவிட்டாலும் அந்த தெருவில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அதில் இணைப்பு பெறாவிட்டாலும் வரிகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தண்ணீர் வினியோகிக்காமல் தண்ணீர் வரி, கழிவு நீரை எடுக்காமல் அதற்கும் வரி வசூலிப்பது நியாயமா? என்று குடிநீர் வாரியத்தை மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×