search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் இன்று நடைபெற இருந்த 12 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் திடீர் ரத்து
    X

    கோவையில் இன்று நடைபெற இருந்த 12 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் திடீர் ரத்து

    கோவையில் இன்று நடைபெற இருந்த 12 கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். #CooperativeSocietiesElections ##CooperativeElections

    கோவை:

    கோவை மாவட்டத்தில் 3-ம் கட்டமாக 71 கூட்டுறவு சங்கங்களுக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதில் பெரும்பாலான இடங்களில் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 18 இடங்களுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெற இருந்தது.

    இந்நிலையில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக கோவை சிங்காநல்லூர் நகர கூட்டுறவு கடன் சங்கம், ஒண்டிப்புதூர் நகர கூட்டுறவு கடன் சங்கம், உப்பிலிபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்கம், வீரகேரளம் நகர கூட்டுறவு கடன் சங்கம்,

    தொண்டாமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பெத்திகுட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தீத்திப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அன்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வி.காரியாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிணத்துக்கடவு அருகே உள்ள செங்குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சுல்தான்பேட்டை அருகே உள்ள தாளகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய 12 சங்கங்களில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

    இதுகுறித்த அறிவிப்பு நோட்டீஸ் சங்க அலுவலகங்களில் ஒட்டப்பட்டது. இதையறியாத உறுப்பினர்கள் இன்று காலை தேர்தலில் ஓட்டுப் போட வந்த போது, தேர்தல் ரத்து என்ற அறிவிப்பை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சில இடங்களில் தேர்தல் அதிகாரிகளுடன் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் ரத்து செய்யப்பட்ட இடங்களில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவை வட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட 6 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ரத்து செய்யப்பட்ட சங்கங்களுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடை பெற்ற போதும் மொத்தம் 5 இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #CooperativeSocietiesElections ##CooperativeElections

    Next Story
    ×