search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்து தகராறில் நண்பனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தொழிலாளி கொலை
    X

    சொத்து தகராறில் நண்பனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தொழிலாளி கொலை

    ஆறுமுகநேரியில் சொத்து தகராறில் நண்பனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தொழிலாளியை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவரது அண்ணன்-தம்பி உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு 2 மகன்கள். இவர்களின் மூத்த மகன் மணிகண்டன் (வயது28). கட்டிட தொழிலாளி. ராஜேந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் குடும்பத்துடன் சென்னை மாதவரத்தில் வசித்து வந்தனர்.

    மணிகண்டனுக்கு ஆறுமுகநேரி அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த பால்ராஜ் மகள் பேச்சியம்மாள் (24) என்பவருடன் திருமணமானது. இந்நிலையில் பேச்சியம்மாளுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஜீவிதா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதனால் மணிகண்டன் அடைக்கலாபுரத்தில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் மணிகண்டன் ஆறுமுகநேரி பேயன்விளை தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்றார். அப்போது அவர் அருகே 2 கார்கள் வந்து நின்றன. காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் திடீரென மணிகண்டனை சரமாரியாக வெட்டியது.

    இதில் மணிகண்டனின் கால் மற்றும் தொடையில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் ஆறுமுகநேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் டி.எஸ்.பி. திபு, ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கொலை செய்யப்பட்ட மணிகண்டனும், ஆறுமுகநேரி பேயன் விளையை சேர்ந்த சுப்பையா மகன் ஜெய்சங்கரும் நண்பர்கள். ஜெய்சங்கர் முன்னாள் கவுன்சிலர் ஆவார். சுப்பையாவுக்கு 2 மனைவிகள். இவர்களில் மூத்த மனைவிக்கு ஜெய்சங்கர் உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனர். 2-வது மனைவிக்கு விஜயன் என்பவர் உள்ளிட்ட 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் சுப்பையா தனக்கு சொந்தமான 85 சென்ட் நிலத்தை விற்க ஏற்பாடு செய்தார். அதற்கு மூத்த மனைவியின் மகன் ஜெய்சங்கர் உதவியாக இருந்தார். இது விஜயனுக்கு பிடிக்கவில்லை.

    இதையடுத்து விஜயனின் மைத்துனர்கள் விக்னேஷ், அவரது அண்ணன் சிவகுமார் ஆகியோரிடம் இந்த விவரத்தை கூறினார். இதனால் ஜெய்சங்கருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு உண்டானது. இதை கேள்விப்பட்ட மணிகண்டன் நண்பர் ஜெய்சங்கருக்கு ஆதரவாக விக்னேஷ், சிவகுமார் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த பிரச்சினையில் மணிகண்டனை விக்னேஷ், சிவகுமார் உள்ளிட்ட 5 பேர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து விக்னேஷ், சிவகுமார் மற்றும் கார் டிரைவர் சேகர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×