search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி - அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது
    X

    புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி - அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது

    புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டு மோசடியில் ஈடுபட்ட கிருமாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் தற்காலிக டாக்டராக பணிபுரியும் விவேக் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலத்தில் பலருடைய வங்கி கணக்கில் இருந்து மர்மமாக பணம் எடுக்கப்பட்டு வந்தது.

    இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர். சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது புதுவை சித்தன்குடியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் பல்கலைக்கழக ஊழியர் பாலாஜி இதில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    அதேபோல் முருங்கப்பாக்கத்தை சேர்ந்த சந்துரு என்பவர் பாலாஜிக்கு உடந்தையாக இருப்பதும் தெரிந்தது. அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அவர்கள்தான் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து இருப்பது உறுதியானது. ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ என்ற சிறிய கருவியை ரகசியமாக பொருத்தி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டில் உள்ள தகவல்கள் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து அதன் மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்தனர்.

    பின்னர் கடைகளில் இருந்து பல லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்குவது போல் காட்டி ஸ்வைப் எந்திரம் மூலம் போலி கார்டை பயன்படுத்தி பணத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளனர்.

    இதற்காக அவர்கள் 19 ‘ஸ்வைப்’ எந்திரத்தை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இவ்வாறு பல கோடி ரூபாய் மோசடி செய்து இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து பாலாஜி, சந்துரு இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரொக்க பணம் மற்றும் சொத்துக்கள் என ரூ. 30 லட்சம் கைப்பற்றப்பட்டது.

    இவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 30 பேருடன் தொடர்பு இருந்துள்ளது. வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றங்களை செய்து மோசடி செய்வது பற்றிய விவரங்களை பெற்றுள்ளனர்.

    அவர்களுக்கு உடந்தையாக இருந்த சென்னையை சேர்ந்த ஷியாம், கமல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் புதுவையை சேர்ந்த டாக்டர் ஒருவரும், 2 அரசியல் தலைவர்களும் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் தான் மூளையாக இருந்து மற்றவர்களை இயக்கி உள்ளனர்.

    அவர்களை கைது செய்வதற்கு போலீசார் முயற்சிகளை மேற்கொண்டனர். அதில், அந்த டாக்டர் சிக்கினார். டாக்டரின் பெயர் விவேக் ஆனந்த் (வயது 30), முத்தியால் பேட்டையை சேர்ந்த தென்னரசு என்பவருடைய மகன்.

    விவேக் ஆனந்த் எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும் மேற்படிப்பு படிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில்தான் மோசடியில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட் டுள்ளார். டாக்டர் விவேக் ஆனந்த் ஸ்வைப் எந்திரங்களை வாங்கி கொடுத்து மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த மோசடியில் நாடு முழுவதிலும் இருந்து பலர் பின்னணியில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது மட்டும் அல்லாமல், சர்வதேச அளவில் இருந்தும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுள்ளனர்.

    வெளிநாடுகளில் இருந்து இதற்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×