search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலாதேவி விவகாரம் - மேலும் 2 பேராசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
    X

    நிர்மலாதேவி விவகாரம் - மேலும் 2 பேராசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

    பேராசிரியை நிர்மலாதேவிக்கு உதவியதாக மேலும் 2 பேராசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
    விருதுநகர்:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சி.பி. சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை சூப்பிரண்டுகள் முத்து சங்கரலிங்கம், கருப்பையா, சாஜிதாபேகம் மற்றும் போலீசார் 9 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிர்மலாதேவி கூறிய தகவலின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரை தேடி வந்தனர்.

    இதில் உதவி பேராசிரியர் முருகன் நேற்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட பல்கலைக்கழகம் வந்த போது சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு கருப்பையா, இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் மடக்கி பிடித்தனர்.

    அவரிடம் விசாரணைக்கான சம்மனை வழங்கி கையோடு விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் இரவு வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    அவர், கருப்பசாமிதான் தனக்கு நிர்மலாதேவியை அறிமுகம் செய்ததாக தெரிவித்ததாகவும், வேறு எதுவும் தனக்கு தெரியாது என்றும் தெரிவித்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கூறப்படுறது.

    தொடர்ந்து உதவி பேராசிரியர் முருகனிடம் விசாரணை நடத்த வேண்டியது இருந்ததால் இரவு அவர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டார். இன்றும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    நிர்மலாதேவியின் சகோதரர் ரவியும் நேற்று விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வந்தார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தேவாங்கர் கல்லூரி கணிதத்துறை தலைவர் நாகராஜ் மற்றும் ஒரு பேராசிரியை, கல்லூரி ஊழியர் கந்தசாமி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்தனர்.

    நிர்மலாதேவி மாணவிகளிடம் பேசியதாக வெளியான ஆடியோவில் பேராசிரியர் நாகராஜன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் அவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு அழைக்கப்பட்ட பேராசிரியைதான் நிர்மலாதேவிக்கு ரோல் மாடல் என கூறப்படுகிறது. நிர்மலாதேவி வேலைக்கு சேர்ந்தபோது, தற்போது விசாரணைக்கு அழைக்கப்பட்ட பேராசிரியையும் அங்கு பணியில் இருந்துள்ளார்.

    அவர் கல்லூரி நிர்வாகத்தை அனுசரித்து சென்றதால் அங்கு அவருக்கு தனி செல்வாக்கு இருந்ததாகவும் அதனை பார்த்த நிர்மலாதேவி தானும் அதுபோன்று தனித்துவம்பெற நினைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் காரியத்தை சாதிக்க முயன்றுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த வழக்கின் விசாரணை பல்வேறு திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி எங்கே இருக்கிறார்? என்பது மர்மமாக உள்ளது. அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அவர் வசித்த திருச்சுழி வீடு, சொந்த ஊரான நாகனாகுளம் என பல பகுதிகளுக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் கருப்பசாமி எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவரது உறவினர்கள் மூலம் கருப்பசாமியை தொடர்பு கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கிடையில் நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் பகுதியில் கருப்பசாமி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. கருப்பசாமி சிக்கினால் இந்த வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் யார்- யார்? என்ற விவரங்கள் தெரியவரும் என சி.பி. சி.ஐ.டி. போலீசார் கருதுகிறார்கள்.

    எனவே அவரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×