search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியை கொல்ல திட்டம் தீட்டினாரா? - கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
    X

    பிரதமர் மோடியை கொல்ல திட்டம் தீட்டினாரா? - கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

    பிரதமர் மோடியை கொல்ல திட்டம் தீட்டி உள்ளதாக வாட்ஸ்-அப்பில் பரவிய உரையாடலையடுத்து கோவையில் கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    கோவை:

    சேலத்தை சேர்ந்தவர் பிரகாஷ். கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

    இவரும், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான கரும்புகடையை சேர்ந்த ரபீக் என்ற முகமது ரபீக்(வயது 53) என்பவரும் பேசும் உரையாடல் கோவையில் செல்போன் ‘வாட்ஸ்- அப்’பில் வேகமாக பரவியது.



    கார் பஞ்சாயத்து தொடர்பாக இருவரும் பேசும் அந்த உரையாடலின் நடுவே ரபீக், ‘கொம்பு முளைச்ச ஆளா இருந்தாலும் எனக்கு பெரிசில்லை, பிரதமர் மோடியையே கொல்லனும்னு முடிவு செஞ்சுருக்கோம், நாங்கள் அத்வானி கோவை வந்தப்போ குண்டு வைத்தவர்கள். நான் உன்னிடம் பேசுவதே பெரிது. இதுவரை என் மீது 22 வழக்குகள் உள்ளது. 160 கார்களை எடுத்து உடைத்துள்ளோம்’ என்கிறார்.

    வாட்ஸ்அப்பில் வேகமாக பரவிய இந்த உரையாடல் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து குனியமுத்தூர் போலீசார் முகமது ரபீக்கை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ)- இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசுதல், 506(2)-கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

    ரபீக் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று 2007-ம் ஆண்டு விடுதலையானார். அதன்பிறகு இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி உள்ளார்.

    இவர் தன்னை பெரியவன் என்று காண்பிப்பதற்காக பிரகாசிடம் அவ்வாறு பேசியதாக போலீசாரிடம் கூறினார். அவரை கோவை 7-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ரபீக்கை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாண்டி உத்தரவிட்டார். இதையடுத்து ரபீக் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரபீக் பேசிய ஆடியோவில் பிரதமரை கொல்ல திட்டமிட்டுள்ளோம் என கூறியிருப்பதால் அவர் உண்மையிலேயே ஏதாவது திட்டமிட்டுள்ளாரா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். அவரது 2 செல்போன் எண்களில் பேசியவர்களின் விவரம் சேகரித்து விசாரணை நடந்து வருகிறது. தேவைப்பட்டால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.

    ரபீக் 160 வாகனங்களை உடைத்ததாக கூறி உள்ளார். இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. பொதுமக்கள் யாராவது இவரிடம் ஏமாந்திருந்தால் போலீசில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    கைதான ரபீக்கை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.
    Next Story
    ×