search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் அணி ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
    X

    தினகரன் அணி ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

    நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு எதிராக டி.டி.வி. தினகரன் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த தேனி போலீசார் அனுமதி மறுத்தனர்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரத்தில் அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேனி மாவட்டம் முழுவதும் நடை பயணமாக சென்று பொது மக்களிடம் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரசாரம் செய்தார். இதே போல பல்வேறு அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும், மாணவர் அமைப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.

    இது குறித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது-

    நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த எங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். எனவே கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று நாங்கள் திட்டமிட்டபடி டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

    பல்வேறு கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் செய்து வரும் நிலையில் எங்கள் கட்சியினர் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிப்பது இல்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் உண்மையான அ.தி.மு.க. என்று தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தெரிந்து விட்டது. அதனால்தான் எங்கள் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி மறுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×