search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் வைத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு பேனர்.
    X
    விவசாயிகள் வைத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு பேனர்.

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் கிராமத்துக்குள் வந்தால் சிறைபிடிப்பு - விவசாயிகள் எச்சரிக்கை

    தஞ்சை அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தில் விவசாயிகள் வைத்திருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு பேனர்கள், நிலங்களை ஆய்வு செய்ய வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. #ONGC #protest
    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய் போன்றவை எடுத்து வருகின்றனர். இதனால் விவசாய நிலங்களும், விவசாயிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நிலங்களில் பதிக்கப்பட்டிருக்கும் குழாய்களை ஆய்வு செய்வதற்கு அவ்வபோது கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் வந்து செல்கின்றனர். அப்போது விவசாயிகளும், பொதுமக்களும் அவர்களை முற்றுகையிடுவதும், அவர்களுக்கு எதிராக போராட்டங்களில் இறங்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்துக்குட்பட்ட ஆழிவாய்க்கால் கிராமத்தில் விவசாயிகள் வைத்திருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு பேனர்கள், நிலங்களை ஆய்வு செய்ய வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைக்கிறது.

    அந்த பேனரில் ‘‘பூமியில் நிலத்தடி வளங்களை ஆய்வு செய்ய எந்த பன்னாட்டு நிறுவனமும் ஊருக்குள் வரக்கூடாது. அப்படி வந்தால் கிராம மக்களால் சிறை பிடிக்கப்படுவீர்கள்..’’ என்று எழுதப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    புதிய காவிரிப்படுகையான ஒரத்தநாடு பகுதியில் கல்யாண ஓடை, ஆற்றுக்கும், கல்லணைக் கால்வாய் ஆற்றுக்கும் இடைபட்ட ஊர் ஆழிவாய்க்கால். இங்கு 2 ஏரிகள், 8-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள் உள்ளன.

    மழை, வெள்ளக் காலங்களில் பயிர்கள் பாதிக்கப்படாத அளவுக்கு வடிகால்களும் அமைந்துள்ளன. இந்த ஊரில் நிலத்தடி நீர் சுவையாகவும், எளிதில் கிடைக்கும் விதமாகவும் உள்ளது. இந்த பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்றாலும், பம்புசெட் மூலம் எப்போதும் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெறும்.

    இந்த நிலையில் தற்போது இந்த பகுதிகளில் எண்ணெய் வளம் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக தெரியவந்ததால் எங்களது எதிர்ப்பை விளம்பர பேனர்களாக வைத்து பதிவு செய்துள்ளோம். எங்களது வாழ்வாதாரமான விவசாயத்தை காப்பதற்கு எங்கள் பகுதியில் தொடக்கத்திலேயே எதிர்ப்பை தெரிவிக்கிறோம். மத்திய-மாநில அரசுகள் எங்கள் கிராமத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்க இப்பகுதியில் எந்த வித ஆய்வுக்கும் அனுமதி வழங்கக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #ONGC #protest

    Next Story
    ×