search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
    X
    உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

    தினகரன் கட்சி நிர்வாகியை கண்டித்து நாமக்கல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

    நகராட்சி துப்புரவு பணியாளரை தாக்கிய தினகரன் கட்சி நிர்வாகியை கண்டித்து நாமக்கல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    நாமக்கல்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், பூங்கா சாலையில் விளம்பர பதாகைகளை வைத்திருந்தனர். இந்த பதாகைகள் நகராட்சி அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, நகரமைப்பு ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் விளம்பர பலகைகளை அகற்ற முற்பட்டனர்.

    அப்போது, ஒரு விளம்பரப் பதாகையில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் படம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்சி நிர்வாகி ஈஸ்வரன் என்பவர், திடீரென நகரமைப்பு ஆய்வாளர் முருகேசனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள், அலுவலரை தாக்கியவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு வந்த நாமக்கல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குலசேகரன், ஊழியர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், தாக்குதல் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.அதன் பேரில், மறியல் போராட்டத்தை கைவிட்ட ஊழியர்கள், நகராட்சி அலுவலக வாயில் முன்பு அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல் நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை அள்ளும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி

    பின்னர் நகரமைப்பு ஆய்வாளர் முருகேசன், அ.ம.மு.க. நிர்வாகி ஈஸ்வரன் மீது நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி துப்புரவு பணியாளரை தாக்கிய ஈஸ்வரன், தகராறில் ஈடுபட்ட மனோஜ்குமார், அருள், பழனிச்சாமி, ராஜலிங்கம், சதீஸ்,விவேக் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த நிலையில், துப்புரவு பணியாளர்களிடம் தகராறு செய்தவர்கள் மற்றும் தாக்கியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை பணிக்கு செல்ல மாட்டோம் என கூறி நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 6 மணி அளவில் முதல் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பை அள்ளும் வாகனங்கள் நகராட்சி அலுவலகம் முன்பு வரிசையாக நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்களுக்கு ஆதரவாக நகராட்சி அலுவலர்கள், பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நகராட்சி அலுவலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலக பணிகள் மற்றும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. நகராட்சி பகுதியில் காலை முதல் குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் பல இடங்களில் குப்பைகள் குவியல் குவியலாக தேங்கி கிடக்கின்றன.

    ஊழியர்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் குலசேகரன் ஆகியோர் வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
    Next Story
    ×