search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் உள்ள கர்நாடக வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஆசிரியர் கைது
    X

    தஞ்சையில் உள்ள கர்நாடக வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஆசிரியர் கைது

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பள்ளி ஆசிரியர் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை சீனிவாசம் பிள்ளை ரோட்டில் கர்நாடக வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளராக ஜெகதீஸ்(வயது33) என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று காலை வங்கிக்கு வந்த கடிதங்களில் ஒன்றை அவர் எடுத்து பார்த்தார். அந்த கடிதம் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை செட்டித் தெருவை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது பெயரில் இருந்தது. இதையடுத்து அந்த கடிதத்தை பிரித்து அவர் படித்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த கடிதத்தில் ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையாக இருக்கும் கர்நாடக அரசை கண்டித்து இந்த வங்கியில் வெடிகுண்டு வெடிக்கும்” என்று எழுதி இருந்ததை கண்ட கிளை மேலாளர் ஜெகதீஸ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுபற்றி தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வங்கிக்கு விரைந்து வந்த போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கடிதத்தில் இருப்பது உண்மையான முகவரியா? இல்லை போலியானதா? என்று கண்டறிய அய்யம்பேட்டைக்கு சென்று அந்த முகவரியில் விசாரணை நடத்தினர். அப்போது அந்த முகவரியில் குறிப்பிட்டு இருந்தது உண்மையான முகவரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த பாஸ்கரனிடம்(41) விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் வேங்கை களஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதும், அவர்தான் தஞ்சையில் உள்ள கர்நாடக வங்கிக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பள்ளி ஆசிரியர் தனது உண்மையான முகவரியில் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×