search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணைக் கொலை செய்ய அனுமதித்த கோயில் யானை உயிரிழந்தது
    X

    கருணைக் கொலை செய்ய அனுமதித்த கோயில் யானை உயிரிழந்தது

    நோய்வாய்ப்பட்ட கோவில் யானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், யானை இன்று உயிரிழந்தது.
    சேலம்:

    சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி கடந்த 35 ஆண்டுகளக்கு முன்பு சேலதிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த யானைக்கு தற்போது 42 வயது ஆகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான கோரிமேடு பகுதியில் உள்ள நந்தவன தோட்டத்தில் வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வயிறு, கால், மூட்டு உள்ளிட்ட பகுதிகளில் புண் ஏற்பட்டு, நாளுக்கு நாள் புண் பெரிய அளவில் அதிகரித்தது. கால்நடை துறை டாக்டர்கள், வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் முன்னேற்றம் இல்லை.

    பக்தர்களுக்கு பல ஆண்டுகளாக ஆசி வழங்கி வந்த யானை எழுந்திருக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டதே என நினைத்து பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது வந்தனர்.

    கடந்த 5-ந்தேதி யானையின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனை கண்ட அறநிலைய துறை அதிகாரிகள் ஜே.சி.பி.எந்திரம் கொண்டு அந்த யானையை தூக்கி நிறுத்த முயற்சித்தனர். அப்போது யானையின் தந்தம் மற்றும் வலது கால் உடைந்து யானை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

    கடந்த சில நாட்களாக யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக ஆங்கில மருத்துவம், இயற்கை மருத்துவம் ஆகிய 2 வகையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே யானையை கருணை கொலை செய்ய வேண்டும் என சென்னை, கோட்டூரை சேர்ந்த விலங்குகள் நல அலுவலர் முரளிதரன் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த ஐகோர்ட்டு 48 மணி நேரத்தில் யானையின் உடலை நிலையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் யானையின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனில் கருணை கொலை செய்து விடலாம் என உத்தரவிட்டது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக டாக்டர் ஜெயதங்கராஜ் தலைமையில் டாக்டர்கள் விஜயகுமார், குமரேசன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கோரிமேடு நந்தவன தோட்டத்திற்கு வந்து யானை உடல் நிலை குறித்து பரிசோதனை செய்தனர். அப்போது யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி ர்.

    இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 12.20 மணி அளவில் யானை பரிதாபமாக இறந்தது. இதை அறிந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். யானையின் பாகன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது.இறந்த யானை கோவிலுக்கு சொந்தமான கோரிமேடு ஆத்துக்காட்டில் உள்ள நந்தவனத்தில் இன்று அல்லது நாளை அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×