search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் - கடற்கரை கிராமங்களில் பீதி
    X

    குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் - கடற்கரை கிராமங்களில் பீதி

    குமரி மாவட்டத்தில் கடல் சீற்றமும், அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டுவதும் கடற்கரை கிராமமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    குளச்சல்:

    மத்திய அரசின் தேசிய கடல்சார் ஆய்வு மையம் தென்தமிழக கடலில் இன்றும், நாளையும் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழும்பும் என்றும், 17.22 வினாடிகளுக்கு ஒரு முறை இந்த அலைகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

    அலைகளின் வேகத்தால் கடலில் பயங்கர சீற்றமும், சூறாவளி காற்றும் வீசுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே தென்தமிழக கடலோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், படகுகளை சீரான இடைவெளி விட்டு நங்கூரம் பாய்ச்சி நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தனர்.

    இந்த தகவல் மாநில அரசின் மீன் வளத்துறை மூலம் தென்தமிழக மாவட்டங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அனைத்து மீனவ கிராமங்களிலும், மீனவ அமைப்புகள் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தேசிய கடல்சார் ஆய்வு மையம் அறிவித்தப்படி நேற்று இரவு முதல் குமரி மாவட்ட கடல் பகுதிகள் சீற்றமாக காணப்பட்டது. அலைகளும் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டின.

    வழக்கமாக அலைகள் சீரான இடைவெளி விட்டு குறிப்பிட்ட உயரத்தில் வீசும். ஆனால் நேற்றிரவு அலைகளின் வேகமும், அவை அதிக உயரத்துடன் எழுந்ததும் மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.


    இதனால் குமரி மாவட்டத்தில் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. சென்னை, திருவள்ளூர் முதல் குமரி மாவட்டம் மணக்குடி வரையிலான கிழக்கு கடல் பகுதியில் தற்போது விசைப் படகுகள் மீன்பிடிக்க தடை உள்ளது.

    மணக்குடி முதல் நீரோடி வரை மேற்கு கடல் பகுதியில் இன்னும் தடைகாலம் தொடங்கவில்லை. எனவே இங்குள்ள மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு செல்வது வழக்கம். ஆனால் இன்றும், நாளையும் குளச்சல் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என குளச்சல் விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் பிராங்ளின் அறிவித்துள்ளார். மீன்வளத்துறையின் எச்சரிக்கை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர், தெரிவித்தார்.

    குளச்சல், கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் தினமும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் பலரும் காற்று வாங்க கூடுவது வழக்கம். நேற்றும் இதுபோல ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் கூடி இருந்தனர். மாலை மயங்கி இரவு தொடங்கியபோது கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது.

    இந்த அலைகள் வழக்கத்தை விட கடலின் மணல் பரப்பு வரை வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தேசிய கடல்சார் ஆய்வு மைய எச்சரிக்கை தகவலை தெரிவித்து கடற்கரையில் இருந்து உடனடியாக செல்லும்படி எச்சரித்தனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி ஒலிபெருக்கி கருவி மூலம் கடற்கரையில் ரோந்து சென்று பொதுமக்களை எச்சரித்தார்.


    சுனாமியின் கோர தாண்டவத்தை ஏற்கனவே அனுபவித்த குமரி மாவட்ட மக்கள் ஒகி புயலின் சீற்றத்தையும் பார்த்து விட்டனர். இதனால் கடலில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவர்கள் பீதிக்கு ஆட்படுவது வாடிக்கையாகி விட்டது.

    இப்போது கடலில் காணப்படும் சீற்றமும், அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டுவதும் கடற்கரை கிராமமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. நாளை வரை கடல் சீற்றம் நீடிக்குமென கூறப்பட்டுள்ளதால் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள்.

    குளச்சல் கடலில் நீண்ட பாலம் உள்ளது. இது கடலுக்குள் செல்லும் வகையில் அமைந்திருக்கும். இந்த பாலத்தின் தூண்கள் மிக உயரமாக அமைந்திருக்கும். ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் கடலுக்குள் இருக்கும் மணலை அலைகள் கரைக்கு இழுத்து வந்து திட்டுபோல உருவாக்கும். இப்போது ஏப்ரல் மாதத்திலேயே கடலுக்குள் இருக்கும் மணல் அலைகளால் இழுத்து வரப்பட்டு குளச்சல் துறைமுக பாலத்தின் தூண்களில் மணல் திட்டை உருவாக்கி உள்ளது.

    இதனால் பாலத்தின் தூண் குறுகி சிறியதாக காட்சி அளிக்கிறது. இதுவும் அப்பகுதி மக்களை மிரட்சியில் ஆழ்த்தி உள்ளது. #tamilnews

    Next Story
    ×